பூத் ஏஜன்டுகள் நியமிப்பதில் பிரதான கட்சியினர்... இழுபறி! அரைகுறை தகவலால் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
பூத் ஏஜன்டுகள் நியமிப்பதில் பிரதான கட்சியினர்... இழுபறி! அரைகுறை தகவலால் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
ADDED : மார் 19, 2024 03:37 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,398 ஓட்டுச்சாவடிகளுக்கு பூத் ஏஜன்டுகளை கூட பிரதான அரசியல் கட்சியினர் இதுவரை முழுமையாக நியமிக்காமல் உள்ளனர். ஓட்டுச்சாவடி ஏஜன்டுகள் குறித்த முழுமையான விபரங்களுடன் விண்ணப்பங்கள் தராததால், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் முழு தகவல் பதிவேற்றப்படவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், லோக்சபா தொகுதிக்கான தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
ஆனால், தேர்தலுக்கான முக்கிய பணிகளில் ஒன்றான பூத் ஏஜன்டுகள் நியமிக்கும் பணிகள் கூட, அரசியல் கட்சியினர் சரிவர செய்யாதது தெரியவந்துள்ளது.
ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், தேர்தல் நாளில் பணியாற்ற உள்ள அரசியல் கட்சியினரின் பூத் ஏஜன்டு விபரங்கள், https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தொகுதிவாரியாக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் எத்தனை பேர் பூத் ஏஜன்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்ற விபரங்களை, தேர்தல் அதிகாரிகள் முழுமையாக பதிவேற்றம் செய்துள்ளனர். மொபைல் எண்களுடன் கட்சி பெயர், முகவர் பெயர், ஓட்டுச்சாவடி ஆகிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
அவ்வாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், தி.மு.க., சார்பில், ஒரு பூத் ஏஜன்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க., சார்பில் நான்கு சட்டசபை தொகுதியிலும், முழுமையாக தங்கள் கட்சியினர் பூத் ஏஜன்டுகள் நியமித்து, அவற்றை பதிவேற்றம் செய்துள்ளனர்.
ஆனால், அ.தி.மு.க., -- தே.மு.தி.க., - பா.ஜ., - காங்., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளின் பூத் ஏஜன்டுகள் பற்றிய விபரங்கள் இடம்பெறவில்லை.
அ.தி.மு.க., சார்பில், பல இடங்களில் பூத் நிலை முகவர்கள் உள்ளனர். ஆனால், முழுமையாக பூத் ஏஜன்டுகள் விபரம் இணையதளத்தில் இல்லை. காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய தொகுதிகளில், குறைவான எண்ணிக்கையிலேயே பூத் நிலை முகவர்கள் உள்ளனர்.
ஆனால், ஆலந்துார் தொகுதியில், தி.மு.க., -- அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் காங்கிரஸ் என, பிரதான நான்கு கட்சியினரின் ஏஜன்டுகள், முழு விபரங்களுடன் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் இடம் பெற்றுள்ளனர்.
ஓட்டுச்சாவடியில் வெளிப்படைத் தன்மையை பின்பற்றவும், அரசியல் கட்சியினரின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், வாக்காளர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆனால், ஏஜன்டுகளை நியமிப்பதில், அரசியல் கட்சியினர் மெத்தனமாக இருப்பது தெரியவந்துள்ளது.
கம்யூனிஸ்ட், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் ஏஜன்டுகள், பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றியதில்லை.
ஆனால், தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சியின் ஏஜன்டுகள், அனைத்து ஓட்டுச்சாவடியிலும் பணியாற்றுவர்.
இவ்வாறான சூழலில், அனைத்து ஓட்டுச்சாவடியிலும், தி.மு.க., தன் ஏஜன்டுகளை நியமித்துள்ள நிலையில், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் இன்னும் தங்களது ஏஜன்டுகளை நியமிக்காமல் இருப்பது, தேர்தல் கமிஷன் இணையதளம் வாயிலாக தெரிய வந்து உள்ளது.
அதாவது, 1,398 ஓட்டுச்சாவடிகளுக்கு, 2,976 ஏஜன்டுகள் இப்போது வரை நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதிகளில், ஏஜன்டுகளின் விபரம் மிக குறைவாக உள்ளது.
இது குறித்து, தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசியல் கட்சியினரிடம், கடந்தாண்டு அக்டோபர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது முதலே, ஏஜன்ட் விபரங்களை நாங்கள் கேட்டு வருகிறோம்.
ஓட்டுச்சாவடி ஏஜன்டுகள் பற்றிய விபரங்கள் கொண்ட விண்ணப்பங்களை, கோட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்க அறிவுறுத்தினோம்.
பலர் இன்னமும் கொடுக்கவில்லை. சில கட்சியினர் விண்ணப்பங்களை வழங்கினர். ஆனால், போட்டோ, மொபைல் எண் ஆகியவை இல்லாததால், அவற்றை திரும்ப வழங்கி, முழுமையாக பூர்த்தி செய்து வழங்க கூறியுள்ளோம்.
கட்சியினர் விண்ணப்பங்களை இன்னமும் கொடுக்கவில்லை. அவர்கள் கொடுத்த ஏஜன்டுகளின் விபரங்கள் அனைத்தையும், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் நாங்கள் பதிவேற்றம் செய்துவிட்டோம். எங்கள் பணியில் எந்த தொய்வும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

