‛‛எங்களது யாத்திரை லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும்'': சொல்கிறார் அண்ணாமலை
‛‛எங்களது யாத்திரை லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும்'': சொல்கிறார் அண்ணாமலை
UPDATED : ஜன 23, 2024 01:36 PM
ADDED : ஜன 23, 2024 01:15 PM

சென்னை: ‛‛எங்களது என் மண் என் மக்கள் யாத்திரை லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும்'' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, குழந்தை ராமரினுடைய பிராண பிரதிஷ்டையை நாம் அனைவரும் பார்த்தோம். மிக முக்கியமான சரித்திரம் நம் நாட்டில் நிகழ்ந்துள்ளது. 500 ஆண்டுகள் நம் மக்கள் பொறுமையாக இருந்தார்கள்.
அனைத்து வழிகளிலும் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்வைத் தமிழகத்தில் நேரலை செய்வதற்குக் கூட நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
எந்தளவுக்கு தமிழக அரசு இங்குள்ள மக்கள் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது, ஹிந்து மக்களுக்கு எதிரான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்பதை மறுபடியும் இந்த மூன்று நாள்கள் ஊர்ஜிதம் செய்திருக்கிறது. இதையும் அறவழியில், ஆன்மிக வழியில், தர்மத்தின் வழியில் பா.ஜ., வென்று காட்டுவோம் என்று இந்த நாளில் சபதம் ஏற்கிறோம்.
வரும் லோக்சபா தேர்தலில் தமிழக மக்கள் ஆளும் திமுக அரசுக்குப் பாடம் புகட்டுவார்கள். மக்களை ஒருங்கிணைக்கவே யாத்திரை செல்கிறோம். அது தொடரும். எங்களது யாத்திரை லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

