தி.மு.க. ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் உள்ளனர்: பழனிசாமி பேச்சு
தி.மு.க. ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் உள்ளனர்: பழனிசாமி பேச்சு
UPDATED : ஏப் 12, 2024 07:28 PM
ADDED : ஏப் 12, 2024 06:42 PM

நாமக்கல்: தி.மு.க, ஆட்சியில் 4 முதல் அமைச்சர்கள் இருப்பதால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என நாமக்கல் தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க, பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
வரும் 19-ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலையொட்டி நாமக்கல் லோக்சபா தொகுதி அ.தி.மு.க, வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து திருச்செங்கோடு அடுத்த காட்டுப்பாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியது,
ஏழைகள் பாதிப்பு
தி.மு.க, ஆட்சியில் ஏழைகள் கனவில் மட்டுமே வீடு கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. கோழி தீவன விலை, முட்டை விலை உயர்வையும் கட்டுப்படுத்த தி.மு.க, அரசு தவறிவிட்டது.மின் கட்டண உயர்வு, நூல் விலை உயர்வால் லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழை எளிய மக்கள் மருத்துவ வசதிக்காக கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தையும் தி.மு.க, அரசு மூடிவிட்டது.இந்த ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டன. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை தி.மு.க., அரசு முடக்கி விட்டது.
கடந்த 6 மாதத்தில் அரிசி விலை கிலோ ரூ. 15 வரை உயர்ந்துவிட்டது.தி.மு.க., ஆட்சி ஒரு வழிப்பறி ஆட்சி. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. ஸ்டாலின் முதல்வராக இருக்கும் வரை தமிழகம் வளர்ச்சி அடையாது.
கொரோனா காலத்தில் கூட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அ.தி.மு.க, போதிய நடவடிக்கை எடுத்தது. எந்த பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் பக்கத்து மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து அ.தி.மு.க, அரசு நடவடிக்கை எடுத்தது.
4 முதலமைச்சர்கள்
அன்றாட பொருட்களின் விலை இந்த தி.மு.க, ஆட்சியில் கடுமையாக உயர்ந்துவிட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க, ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் இருப்பதால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. எனவே நீங்கள் அ.தி.மு.க, ஆட்சியின் திட்டங்களை ஒப்பிட்டு பார்த்து வாக்களியுங்கள்.
முதல்வர் ஸ்பெயின் போனது எதற்காக?
அமைச்சர் உதயநிதியும், சபரீசனும், 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து விட்டு என்ன செய்வதென தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அமைச்சர் தியாகராஜன் பேசிய ஒரு ஆடியோ வந்தது.
அந்த 30 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்வதற்குத்தான் ஸ்டாலின், ஸ்பெயின் போனார் என்று மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

