'லாக்கப் டெத்': டி.எஸ்.பி., உட்பட9 போலீசாருக்கு ஆயுள் சிறை 25 ஆண்டுகள் கிடப்பில் இருந்த வழக்கில் நீதிபதி அதிரடி
'லாக்கப் டெத்': டி.எஸ்.பி., உட்பட9 போலீசாருக்கு ஆயுள் சிறை 25 ஆண்டுகள் கிடப்பில் இருந்த வழக்கில் நீதிபதி அதிரடி
UPDATED : ஏப் 06, 2025 02:54 AM
ADDED : ஏப் 06, 2025 02:41 AM

துாத்துக்குடி:விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி இறந்த வழக்கில் டி.எஸ்.பி., உட்பட காவல் அதிகாரிகள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதில், 25 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்கை ஓராண்டில் விசாரித்து நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.
துாத்துக்குடி, மேல அலங்காரத்தட்டு பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் 43; உப்பள தொழிலாளி. இவர், வெடிகுண்டு தொடர்பான வழக்கிற்காக, 1999 செப்., 17ல் விசாரணைக்காக தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போதைய எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அவரிடம் விசாரித்தனர். காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த வின்சென்ட், மறுநாள் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதில் வின்சென்ட் இறந்ததாக கூறி, அவரது மனைவி கிருஷ்ணம்மாள் புகார் அளித்தார்.
ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தப்பட்டு, வின்சென்ட் மரணம் தொடர்பாக எஸ்.ஐ., ராமகிருஷ்ணன், காவலர்கள் சோமசுந்தரம், ஜெயசேகரன், ஜோசப்ராஜ், பிச்சையா, செல்லதுரை
வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, 25 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு ஜூன் மாதம், துாத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஓராண்டாக நடந்து வந்த இந்த வழக்கில், 13 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. வழக்கில், 38 ஆவணங்கள் குறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், வழக்கில் தொடர்புடைய, 11 பேரில், 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அப்போதைய எஸ்.ஐ., ராமகிருஷ்ணன், தற்போது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.,யாக உள்ளார். சோமசுந்தரம், நில அபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பிச்சையா அதே பிரிவில் எஸ்.எஸ்.ஐ.யாகவும் உள்ளனர்.
ஜெயசேகரன், ஜோசப்ராஜ், செல்லதுரை, வீரபாகு, சுப்பையா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். ஓய்வு பெற்ற காவலர் சிவசுப்பிரமணியன், ரத்தினசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

