ADDED : பிப் 04, 2023 10:51 PM

''தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், பிற மொழி இலக்கியங்கள் தமிழுக்கு வர வேண்டும். தமிழ் படைப்புகள் பிற மொழியில் இடம் பெற வேண்டும்,'' என்கிறார் கவிஞர் முத்தமிழ் விரும்பி.
தஞ்சையை சேர்ந்த கவிஞர் முத்தமிழ் விரும்பி, தற்போது கோவையில் வசித்து வருகிறார். 10 கவிதை நுால்களை எழுதி இருக்கும் இவர், தனது அனைத்து நுால்களையும் இந்தி, தெலுங்கு, மலையாளம், உருது, ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட, 10 மொழிகளில் தன் சொந்த முயற்சியில் மொழிபெயர்த்து, வெளியிட்டு இருக்கிறார்.
இந்த கவிதை நுால்கள், பிற மொழி வாசகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. அவரை சந்தித்த போது, தனது படைப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
நான் கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக கவிதைகள் எழுதி வருகிறேன்.
மேலை நாட்டு இலக்கியங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பிறகுதான், தமிழில் நவீன இலக்கியங்கள், புதிய சிந்தனைகள் தோன்றின.
பிற மொழி இலக்கியங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட அளவுக்கு, தமிழ் படைப்புகள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படவில்லை.
அதற்கான முயற்சியை எழுத்தாளர்கள் செய்வதில்லை. நான் முயற்சி எடுத்து, எனது, 10 கவிதை நுால்களையும் இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், அரபு, ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும், மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிறேன்.
உலகம் முழுவதும் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் அந்த நாட்டு மொழியை கற்றுள்ளனர். அவர்களிடம் நம் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அந்த நாட்டின் தாய் மொழியில், தமிழ் இலக்கியத்தை ரசனையுடன் படிக்கின்றனர். தொடர்ந்து மொழியாக்கம் நடக்கும் போது, தமிழுக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் கிடைப்பார்கள்.
சர்வதேச புத்தக கண்காட்சியில், மொழி பெயர்ப்பு இலக்கியங்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தமிழக அரசு மொழி பெயர்ப்புக்கு மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இந்த வாய்ப்பை எழுத்தாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தமிழ் படைப்புகள் குடத்தில் இட்ட விளக்காக உள்ளன. அதை குன்றில் இட்ட விளக்காக மாற்ற வேண்டும் என்றால் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ் இலக்கியத்துக்கு தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலை நாட்டு இலக்கியங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பிறகுதான், தமிழில் நவீன இலக்கியங்கள், புதிய சிந்தனைகள் தோன்றின.
பிற மொழி இலக்கியங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட அளவுக்கு, தமிழ் படைப்புகள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படவில்லை.
அதற்கான முயற்சியை எழுத்தாளர்கள் செய்வதில்லை.