திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது மண்ணின் மைந்தர்கள் உரிமை; சொல்கிறார் கிருஷ்ணசாமி
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது மண்ணின் மைந்தர்கள் உரிமை; சொல்கிறார் கிருஷ்ணசாமி
ADDED : டிச 23, 2025 08:10 AM

ராஜபாளையம்: ''திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது மண்ணின் மைந்தர்களின் உரிமை. இங்கு தீபம் ஏற்றுவது, தமிழ் மண்ணோடு, மொழியோடு பின்னிப் பிணைந்த ஒரு கலாசாரமாக இருக்கிறது,'' என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் அவர் அளித்த பேட்டி: பல ஆண்டுகளாகியும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை. அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஜாதி ரீதியில் பணி ஒதுக்கீடு, விடுப்பு வழங்குகின்றனர். போக்குவரத்து துறையில் பல்வேறு குளறுபடிகளால் ஊழல் மலிந்துள்ளது.
தி.மு.க.,வினர் பல லட்சம் பேரை, போலி வாக்காளர்களாக சேர்த்துள்ளனர்; அவர்களை நீக்கினால், பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எதிர்க்கின்றனர். அரசியல் காரணங்களுக்காக, மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, எஸ்.ஐ.ஆர்., பணியை எதிர்க்கின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருப்பரங்குன்றம். இந்த மலைப் பகுதியும் முருகனுக்கு சொந்தமானது. அதில் தீபம் ஏற்றுவது தவறில்லை. அது மண்ணின் மைந்தர்களின் உரிமை. இங்கு தீபம் ஏற்றுவது, தமிழ் மண்ணோடு, மொழியோடு பின்னிப் பிணைந்த ஒரு கலாசாரம். இவ்விவகாரத்தில், தமிழக அரசின் அணுகுமுறை முற்றிலும் சரியல்ல.
இது, ஹிந்து- முஸ்லிம், ஹிந்து -கிறிஸ்துவ பிரச்னை அல்ல. இதில், தி.மு.க., அரசியல் செய்வது நல்லதல்ல. கிரானைட் துாண், எல்லைக்கல், சமணர் துாண் என கூறிவிட்டு, எதையும் நிரூபிக்க முடியாத நிலையில் தற்போது தி.மு.க., அரசு தவிக்கிறது. யாரோ தமிழக அரசை தவறாக வழி நடத்துகின்றனர்.
தேர்தலில் தி.மு.க., அரசு, வாக்காளர்களுக்கு 5,000 கொடுத்தாலும், 50,000 ரூபாய் கொடுத்தாலும் ஓட்டுகள் எதிர்ப்பாகத்தான் விழும். ஆட்சியின் அலங்கோலத்தை, மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

