லாவண்யா ஜுவல்ஸ் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துக்கள் முடக்கம்
லாவண்யா ஜுவல்ஸ் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துக்கள் முடக்கம்
ADDED : பிப் 01, 2024 08:17 PM
சென்னை:சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், லாவண்யா ஜுவல்ஸ் நிறுவனத்தின், 34.11 கோடி ரூபாய் மதிப்புள்ள, நிலம், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட சொத்துக்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
கோவையை தலைமையிடமாக வைத்து, லாவண்யா கோல்டு ஜுவல்ஸ் நிறுவனம் செயல்படுகிறது.
இதன் இயக்குனர்கள், போலி ஆவணங்கள் வாயிலாக, ஆண்டு வருமானத்தை அதிகமாக காட்டி, எஸ்.பி.ஐ., வங்கியில், 65 கோடி ரூபாய் கடன் வாங்கினர். அதை திரும்ப செலுத்தாமல் தொழில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக, கணக்கு விபரங்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து, எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். விசாரணையில், வங்கி கடன் வாங்கி, சட்ட விரோதமாக வெளிநாடுகளில், பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த நிறுவனத்தின் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அவர்களும் வெளிநாடுகளில், சட்ட விரோத முதலீடுகள் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
எஸ்.பி.ஐ., வங்கியில் தாக்கல் செய்த சொத்து ஆவணத்திற்கு போலி பத்திரம் தயாரித்து, அதன் வாயிலாக, 20 கோடி ரூபாய் நிலத்தை, ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியரை பினாமியாக நியமித்து, 6.50 கோடி ரூபாய்க்கு மின்னணு ஏலம் விட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், லாவண்யா ஜுவல்ஸ் நிறுவனத்தின், சென்னை மற்றும் கோவையில் உள்ள நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு என, 34.11 மதிப்புள்ள சொத்துக்களை நேற்று, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

