கனவுகளை விடாமல் துரத்த வேண்டும்; மாணவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தல்
கனவுகளை விடாமல் துரத்த வேண்டும்; மாணவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தல்
ADDED : பிப் 04, 2026 01:59 AM

சென்னை: ''மாணவர்கள் தங்களின் கனவுகளை எட்ட, அவற்றை துரத்த வேண்டும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.
டில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற, தமிழகம், புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபார் பகுதி, தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு, கவர்னர் மாளிகையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அதில், கவர்னர் ரவி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மாணவர்களிடம் அவர் பேசியதாவது:
மாணவ பருவத்திலேயே நாட்டின் மிக முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது சிறப்பு. இது, உங்களுக்கும், நாட்டுக்கும், பெருமையும், கவுரவுமும் தரும் விஷயம். இதற்காக, நீங்கள் பல தடைகளை கடந்து வந்திருப்பீர்கள். நான், தேசிய மாணவர் படையில் இருந்தபோது, நல்லொழுக்கத்தை கற்றேன்; அது, தற்போது வரை எனக்கு பயன்படுகிறது.
தினமும் அதிகாலை எழுவது, என் படுக்கையை நானே மடிப்பது அல்லது சுத்தம் செய்வது, யோகா, உடற்பயிற்சி செய்வது, எதையும் ஒழுங்குடன், குறித்த நேரத்தில் செய்வது என, அனைத்து பழக்கங்களும் தேசிய மாணவர் படையில் இருந்தபோது அளிக்கப்பட்டவை.
நீங்கள் மிக முக்கிய பருவத்தில் இருக்கிறீர்கள். உங்கள் கனவுகள் பெரிதாக இருக்கட்டும். அதற்கான முயற்சிகள், உழைப்பு போன்றவற்றை பெரிதாக கொடுங்கள். உங்கள் கனவு எதுவானாலும், அதை விடாமல் துரத்துங்கள். வாய்ப்புகளுக்காக ஓடுங்கள். 'விக்சித் பாரத்' எனும் வளர்ந்த பாரதம், உங்கள் ககைளில்தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

