யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் கவினின் தோழி: திருமாவளவன் சந்தேகம்
யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் கவினின் தோழி: திருமாவளவன் சந்தேகம்
ADDED : ஜூலை 31, 2025 05:25 PM

திருநெல்வேலி; '' கவினின் தோழி வீடியோவை பார்க்கும் போது அவர் யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளார். அப்படி சொல்லச் சொல்லியது போல் தெரிகிறது,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தயக்கம் ஏன்
நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு திருமாவளவன் கூறியதாவது: நயம்பட பேசி கவினை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து படுகொலை செய்திருக்கிறார்கள்; தென் மாவட்டங்களில் நடக்கும் கொலைகளுக்கு பின்னால் கூலிப்படை கைவரிசை உள்ளது. இது குறித்து போலீஸ்காரர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றவரை கைது செய்வதில் ஏன் தயக்கம்.
கோரிக்கை
சிபிசிஐடி விசாரணை சட்டப்பூர்வமான முறையில் நடக்க வேண்டும். சுர்ஜித்தின் பெற்றோரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி கூலிப்படையினரை கண்டுபிடிக்க வேண்டும் என்பது கவினின் தந்தையின் கோரிக்கை. கவினின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் எனக்கூறினோம். அதற்கு, கவினின தந்தை, ' நீதி மறுக்கப்படுமோ, குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. எங்களது உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் பேசி முடிவெடுக்க வேண்டும் ', எனத் தெரிவித்துள்ளார்.
கவினை கூலிப்படையினரை வைத்து கொல்ல செய்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அவர்களை கண்டறிந்து கைது செய்து தண்டிக்க வேண்டும் என்பதே அவரின் கோரிக்கை. இதனை அரசிடம் வைக்கிறோம்.
நிதியுதவி
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு என்ன இழப்பீடு தர வேண்டுமோ அதனை தர வேண்டும். வீடு கட்டித்தர வேண்டும். நிதியுதவி தர வேண்டும். இது சட்டப்பூர்வமான இழப்பீடுகள். தேக்கம் ஏற்படாத வரையில், முதல்வர் தலையிட்டு வழங்க வேண்டும்.பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டும். கூலிப்படையினரால் அவர்களின் உயிருக்கு அச்சறுத்தல் ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்க அவர்களை நிலை குலைய செய்துவிடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. கவினின் தந்தைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சந்தேகம்
கவினின் தோழி வீடியோவில் அவரின் உடல்மொழியை பார்க்கும்போது, யாரோ கட்டுப்பாட்டில் இருக்கிறார். அச்சுறுத்தலில் இருக்கிறார். யாரோ சொல்லச்சொல்லி அப்படி சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அவர் சுதந்திரமாக பேசியதாக தெரியவில்லை. பெற்றோருக்கு தொடர்பு இல்லை என சொல்லும் அவர், பெற்றோர், உடன்பிறந்தோரிடம் சொல்லி கவின் கொலையை தடுத்து இருக்கலாம். சாதியவாத அமைப்புகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி கவினின் நடத்தையை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். அவர்களை போலீசார் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

