ரூ.1.01 கோடி நஷ்ட ஈடு தர கருப்பர் தேசத்திற்கு உத்தரவு
ரூ.1.01 கோடி நஷ்ட ஈடு தர கருப்பர் தேசத்திற்கு உத்தரவு
ADDED : மார் 08, 2024 10:34 PM
சென்னை:சேவா பாரதி அறக்கட்டளைக்கு, 1.01 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க, கருப்பர் தேசம் யு டியூப் சேனலுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சேவா பாரதி அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் ரபுமனோகர் தாக்கல் செய்த மனு:
சேவா பாரதி அமைப்பு ஏராளமான நற்பணிகளை செய்து, பொது மக்கள் மத்தியில் மிகப்பெரிய மரியாதையை பெற்றுள்ளது. மயிலாப்பூரை சேர்ந்த சுரேந்தர் என்பவர், 'கருப்பர் தேசம்' என்ற யு டியூப் சேனல் நடத்துகிறார்.
இதில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில், தந்தை, மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், சேவா பாரதி அமைப்பை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.
பொய் தகவலை வெளியிட்டதற்காக, எங்கள் அமைப்புக்கு, 1.01 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, சுரேந்தருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார்.
மனுவுக்கு பதிலளிக்க, எதிர் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். ஆனால், எதிர் தரப்பில் பதிலளிக்கவில்லை.
இதையடுத்து, சேவா பாரதி அமைப்புக்கு, 1.01 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும், அந்த அமைப்பு குறித்து பேசவும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

