நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை
நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை
UPDATED : டிச 04, 2025 10:02 AM
ADDED : டிச 03, 2025 04:14 PM

மதுரை: நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் தீபம் ஏற்றாத நிலையில், ஹிந்து அமைப்பினருக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது; பதட்டமான சூழல் நிலவுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (டிச.,3) நடைபெறுகிறது. இங்கு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பக்தர்கள் விரும்பினர். ஆனால், மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் 1920 ம் ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பு நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தது. இதற்காக பல்வேறு போராட்டங்களை இந்த அமைப்பு முன்னெடுத்தது.
மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டார். இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என உத்தரவிட்டு இருந்தார்.
இதனை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கு ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இதனையடுத்து, தனி நீதிபதி உத்தரவு அடிப்படையில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வந்தனர்.
ஆனால், வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி மலை உச்சியில் கார்த்திகை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இது பக்தர்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவமதிப்பு வழக்கு
இதனையடுத்து, திருப்பரங்குன்றம் மலையில் பிற பகுதிகளை போல பழைய தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவை நிறைவேற்றவில்லை என மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் நீதிமன்ற உத்தரவுபடி இன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இல்லையெனில் மாலை 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார். ஆனால், கார்த்திகை தீபம் ஏற்றப்படாத நிலையில், மனுதாரர் மற்றும் 10 பேர் உடன் சென்று தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். உடன் சி .ஐ. எஸ் .எப் .போலீசார் பாதுகாப்புக்காகச் செல்ல வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
தள்ளுமுள்ளு
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை என்பதால் கோவில் முன் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு திரண்டிருந்த இந்து முன்னணி அமைப்பினர் மலை உச்சிக்கு செல்ல முயன்றனர். தடுத்த போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 2 போலீசார் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு போராட்டத்திலும் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
144 தடை உத்தரவு
இந்து அமைப்புகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை தீரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட கலெக்டர் பிரவின் குமார் அறிவித்துள்ளார்.
காத்திருப்பு
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற திருப்பரங்குன்றம் சென்றுள்ளனர். பாதுகாப்புக்காக சிஐஎஸ்எப் போலீசார் வருவதற்காக அவர்கள் அங்கு காத்திருந்தனர்.
சிஐஎஸ்எப் வீரர்களுடன் போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை
நீதிமன்ற உத்தரவுப்படி, பாதுகாப்புக்கு வந்த சிஐஎஸ்எப் வீரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 144 தடை உத்தரவு உள்ளதாலும் அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாலும் மலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என போலீஸ் கமிஷனர் கூறினார்.
ஆனால், 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னரே, நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், அதனை போலீசார் ஏற்கவில்லை. இதனால் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ராமரவிக்குமார் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவை அரசு மதிக்கவில்லை. மத்திய பாதுகாப்புப் படையையும் கைது செய்வோம் என போலீசார் கூறுகின்றனர். மக்களுக்கு வழிபாட்டு உரிமை இல்லையா எனத் தெரிவித்தார்.
நாளை விசாரணை
இந்நிலையில், நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, நாளை( டிச.,13) தமிழக அரசின் முறையீட்டை முதல் வழக்காக விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
சூடம் ஏற்றி வழிபாடு
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், மலைப்பாதையில் சூடம் ஏற்றி வழிபட்ட மனுதாரர் ராம ரவிக்குமார், ' நாளை கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறி புறப்பட்டு சென்றார்.

