வேலியே பயிரை மேய்ந்தது போல..... பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு; போலீஸ்காரர் கைது
வேலியே பயிரை மேய்ந்தது போல..... பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு; போலீஸ்காரர் கைது
ADDED : ஜூலை 25, 2025 12:06 PM

திருநெல்வேலி: திருநெல்வேலி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் பெண் காவலர் தங்கமாரி வீட்டில் 30 பவுன் நகை திருடிய சம்பவத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் மணிகண்டன் 31, அவரது நண்பர் முகமது அசாருதீன் 31 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியை அடுத்த மலையாள மேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). இவருக்கு தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கலங்கல் கிராமத்தை சேர்ந்த தங்கமாரி(43) என்பவருடன் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் தலைமை காவலராக தங்கமாரி பணிபுரிந்து வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் திருநெல்வேலி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் 2வது மாடியில் குடியிருந்து வருகின்றனர். கடந்த 16ம் தேதி தங்கமாரி தனது மகள்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பணிக்கு புறப்பட்டார்.
பின்னர் மதிய உணவு சாப்பிடுவதற்காக தங்கமாரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்திற்குள் நுழையும் சாலையில் தீயணைப்பு நிலையத்திற்கு எதிரே உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். கொள்ளை சம்பவம் நடந்த நாளன்று அந்த பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் நெல்லை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் காவலரான கடையநல்லுர் கிருஷ்ணாபுரத்தை மணிகண்டன்(31) என்பவரது எண்ணில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்திருந்தது.
அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் தான் தங்கமாரியின் வீட்டில் நகையை திருடியுள்ளார் என்பதும், அதனை தனது நண்பரான கடையநல்லூரை சேர்ந்த முகமது அசாருதீன்(31) என்பவரிடம் ஒப்படைத்து வைத்திருந்தார் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்ததால் பண தேவைக்காக காவலர் மணிகண்டன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகளை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.