சி.பி.ஐ., விசாரணைக்கு முதல்வர் தயாரா? அன்புமணி கேள்வி
சி.பி.ஐ., விசாரணைக்கு முதல்வர் தயாரா? அன்புமணி கேள்வி
ADDED : டிச 10, 2024 07:49 PM
சென்னை:'மின் வாரிய ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட, முதல்வர் ஸ்டாலின் தயாரா' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
சூரியசக்தி மின்சாரம் வாங்க தமிழக மின் வாரியத்திற்கு, அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக, அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து, சட்டசபையில் பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாத முதல்வர் ஸ்டாலின், 'அதானி ஊழல் குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க, பா.ம.க., - பா.ஜ., தயாரா' என, கேட்டுள்ளார்.
அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணையை ஆதரிக்க, பா.ம.க., தயாராக உள்ளது. அதேபோல், தமிழக மின் வாரியத்திற்கு அதானி குழுமம் லஞ்சம் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு பிரிவின் விசாரணைக்கோ உத்தரவிட தயாரா என்பதை, முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

