ஜெயலலிதா ஹிந்துத்வா தலைவரா? அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம்
ஜெயலலிதா ஹிந்துத்வா தலைவரா? அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம்
UPDATED : மே 25, 2024 06:27 PM
ADDED : மே 25, 2024 01:17 PM

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மிகச்சிறந்த ஹிந்துத்வா தலைவர் எனக்கூறிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள, அண்ணாமலை அவதூறு பரப்புகின்றார் எனக்கூறியுள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று( மே 24) அளித்த பேட்டியில், அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்வா தலைவர். ஹிந்து மதத்துக்கு அவர் நேரடியாக ஆதரவு தெரிவித்து வந்தார். ஜெயலலிதா இருந்தபோது, தமிழகத்தில் பா.ஜ., இருந்தாலும், ஹிந்து மதத்தினரின் ஆதரவு அவருக்கே பெரிதும் கிடைத்து வந்தது. ஹிந்து மதத்தின் வளர்ச்சிக்காக அவர் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளார் எனக்கூறியிருந்தார்.
அண்ணாமலை பேட்டியை படிக்க கிளிக் செய்யுங்கள்:
இது தொடர்பாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜெயலலிதாவை மதவாத தலைவர் போல் சித்தரித்து அவதூறு பரப்புகின்றனர். அவர் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர். ஜெயலலிதா குறித்து அண்ணாமலை அவதூறு பரப்புகிறார். ஜாதி, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்ட அனைவருக்குமான தலைவராக திகழ்ந்தவரை ஒற்றை மதத்தலைவர் போல் சித்திரிக்கிறார்.
தன்னை அடையாளபடுத்தி கொள்ள அவதூறு பரப்பும் வகையில் பேட்டி கொடுப்பதும், ஜெயலலிதா பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே அண்ணாமலை பேட்டி கொடுப்பதும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

