ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுதந்திர தின வாழ்த்து தவிர்ப்பு
ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுதந்திர தின வாழ்த்து தவிர்ப்பு
UPDATED : ஆக 16, 2025 05:57 PM
ADDED : ஆக 15, 2025 09:32 PM

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டுகளில், 'வீடு தேடி வரும் உங்களுடன் ஸ்டாலின்' விளம்பரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஆவின் நிறுவனம், நான்காவது ஆண்டாக, சுதந்திர தின வாழ்த்தை அச்சிடாமல் புறக்கணித்துள்ளது.
ஆவின் நிறுவனம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பால் பாக்கெட்டுகளில், பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து அச்சிட்டு வந்தது. அதன்பின் ஆயுத பூஜை, விஜயதசமி போன்றவற்றுக்கும் வாழ்த்து அச்சிடப்பட்டது.
கடந்த 2021ல், தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த பின், ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து செய்தி அச்சிடுவது நிறுத்தப்பட்டது. இந்த செயல், பா.ஜ., உள்ளிட்ட சில எதிர்கட்சிகள் மத்தியில் பேசு பொருளானது. சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இவ்வாறு, மக்கள் மத்தியில் பேசுபொருளான பின், கடந்த 2022 முதல், மீண்டும் ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்களுக்கு, ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்து செய்தி அச்சிடப்பட்டது. அதேபோல், தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த பின், கடந்த நான்கு ஆண்டுகளாக, 'சுதந்திர தினம், குடியரசு தினம், தேசிய பால்வள தினம்' ஆகியவற்றுக்கு வாழ்த்து செய்தி அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், 'வீடு தேடி வரும் உங்களுடன் ஸ்டாலின்' போன்றவற்றின் விளம்பரங்களை, தமிழக அரசு, ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிட்டு வருகிறது. ஆனால், சுதந்திர தினத்திற்கு வாழ்த்து செய்தி வெளியிடுவதை ஆவின் நிர்வாகம் தவிர்த்துள்ளது. இதை, பலரும் விமர்சித்து வருகின்றனர்.