ADDED : மார் 15, 2024 07:19 PM
சென்னை:தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில, சென்னை கோயம்பேடு சந்தையில், அதன் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தக்காளி சாகுபடி நடந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் தேவைக்காக, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து உள்ளது.
தற்போது, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும், தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால், அவற்றின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. கோயம்பேடு சில்லரை விற்பனை சந்தையில், கடந்த மாதம் கிலோ தக்காளி, 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
வரத்து அதிகரிப்பு காரணமாக, தற்போது கிலோ, 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் தக்காளி விலை மேலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

