ADDED : பிப் 27, 2024 11:23 PM

சென்னை:புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி நினைவிடத்தில், பார்வையாளர்கள் குவிந்து வருவதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரினாவில், 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது.
இதை முதல்வர் ஸ்டாலின்,திறந்து வைத்தார். அருங்காட்சியகத்தில் நவீன தொழில்நுட்பத்தில் திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு, 'ஆன்லைன்' முன்பதிவு வசதி ஏற்படுத்த, பொதுப்பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்காக, மொபைல் போன் செயலி உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் துவங்கியுள்ளன.
இதன் காரணமாக, அருங்காட்சியகம் தற்காலிகமாக பூட்டப்பட்டு உள்ளது. நினைவிடத்தை மட்டும் பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நினைவிடத்தை காண நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.
கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் உள்ள திறந்தவெளி அரங்கில் அமர்ந்து, மெரினா கடற்கரை அழகை ரசித்தனர்.
மொபைல் போன்களில் போட்டோ எடுத்தனர். பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு பாதுகாப்பிற்காக, கூடுதல் போலீசார், நேற்று பிற்பகலுக்கு பின் குவிக்கப்பட்டனர்.

