சொன்னால் செய்வேன்; மக்கள் சந்திப்பை மீண்டும் துவக்கிய த.வெ.க., விஜய் உறுதி
சொன்னால் செய்வேன்; மக்கள் சந்திப்பை மீண்டும் துவக்கிய த.வெ.க., விஜய் உறுதி
UPDATED : நவ 24, 2025 10:38 AM
ADDED : நவ 23, 2025 11:56 PM

சென்னை: கரூர் சம்பவத்திற்கு பின், மக்கள் சந்திப்பை மீண்டும் துவக்கிய த.வெ.க., தலைவர் விஜய், 'சொன்னால் செய்வேன்' என உறுதி அளித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், தேர்தலுக்கு முன்னோட்டமாக, 'அனைவருக்கும் நிரந்தரமான வீடு' என்பது உட்பட, பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.
கரூரில், செப்டம்பர் 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இச்சம்பவத்திற்கு பின் நேற்று, காஞ்சிபுரம் மாவட்ட த.வெ.க., தொண்டர்களை, ஸ்ரீபெரும்புதுாரை அடுத்த குன்னம் கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் விஜய் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: அண்ணாதுரை துவக்கிய கட்சியை கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்கின்றனர் என, நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
தனிப்பட்ட முறையில், எங்களுக்கும், அவர்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. தனிப்பட்ட முறையில், அவர்கள் வேண்டுமானால் நம் மீது வன்மத்தில் இருக்கலாம்; நாம் அப்படி கிடையாது. மக்களை, என்னை, எல்லோரையும், பொய் சொல்லி நம்ப வைத்து, ஓட்டுப்போட வைத்து ஏமாற்றினர். ஆட்சிக்கு வந்த பின் நல்லது செய்வது போல நாடகமாடுகின்றனர்.
கொள்ளை தான்
அவர்களை எப்படி நாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியும். 'கொள்கை கிலோ என்ன விலை' என்று கேட்கும் அளவிற்கு கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், நமக்கு கொள்கை இல்லை என்கிறார். இவர்கள் கொள்கையை குத்தகைக்கு எடுத்தது போல பேசுகின்றனர். ஆனால், இவர்களின் கொள்கையே கொள்ளை தான். இது, மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். 'எங்கள் கட்சி ஒன்றும் சங்கரமடம் கிடையாது' என்றனர். இப்போது, அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
நாங்கள் பாப்பா என்று ஆசையாக, பாசமாக சொன்னதை, அதிர்ச்சியாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது. அதையே நீங்கள் விமர்சனம் என்றால், நாங்கள் என்ன செய்வது. நாங்கள் இன்னும் விமர்சனம் செய்யத் துவங்கவில்லை. இன்னும் அடிக்க துவங்கவே இல்லை; அதற்குள் அலறினால் எப்படி?
அமைச்சரவையில் புலவர்கள் யாராவது இருந்தால், கர்சீப் எடுத்து அவர்களின் கண்ணீரை துடைத்து விடுங்கள். காஞ்சிபுரம் மண்ணை வாழ வைக்கும் ஜீவநதி பாலாறு. இன்றைக்கு, பாலாறை சுரண்டி கொள்ளையடித்து விட்டனர்; மொத்தமாக அழித்து விட்டனர். இதை நான் போற போக்கில் சொல்லவில்லை; ஆதாரத்துடன் சொல்கிறேன். அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி, 4,730 கோடி ரூபாய் அளவுக்கு மணலை கொள்ளை அடித்துள்ளனர்.
ஆதாரம்
இதற்கெல்லாம் நீதிமன்றத்திலும், அமலாக்க துறையிடமும் ஆதாரம் உள்ளது. மேலிருந்து கீழ் வரைக்கும், 'சிண்டிகேட்' போட்டு கொள்ளை அடித்துள்ளனர். மக்களின் பிரச்னைகளை பேசுவதால், இப்போது ஆட்சியில் இருப்போருக்கு நம் மீது சில ஆத்திரங்கள் வரத்தான் செய்யும். அதனால் தான், சட்டசபை துவங்கி சாதாரண நிகழ்ச்சிகள் வரை, எல்லா மேடைகளிலும் த.வெ.க., குறித்து அவதுாறு பேசுகின்றனர்.
கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என, தெளிவாக கூறிவிட்டுத் தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதில், எந்த குழப்பமும், ஊசலாட்டமும் இல்லை. விஜய் சும்மா எதுவும் சொல்ல மாட்டான்; ஒன்று சொன்னால் அதை செய்யாமல் விடமாட்டான். அது, மக்களுக்கு நன்றாகவே தெரியும். எம்.ஜி.ஆர்., கட்சி துவக்கிய போது, அவரை கூத்தாடி என்றவர்கள், பின்னர் அவருடன் சேர்ந்தனர்.
தமிழக மக்களும் எம்.ஜி.ஆரிடம் தான் சேர்ந்தனர். அந்த வரலாறு, நம்மைவிட அவர்களுக்கு நன்றாகவே தெரியும். 'மர்ம யோகி' படத்தில், 'கரிகாலன் குறி வைத்தால், தவற மாட்டேன்; தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்' என்று எம்.ஜி.ஆர்., கூறியிருப்பார். இதை எல்லாம் யாருக்கு சொல்கிறேன்; எதற்கு சொல்கிறேன் என்று புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் நன்றாக இருக்கும். ஏன் விஜயை தொட்டோம்; விஜய் உடன் இருக்கும் மக்களை தொட்டோம் என, நினைத்து நினைத்து, 'பீல்' பண்ணப் போகின்றனர்.
த.வெ.க.,வினருக்கு அரசியல் புரிதல் இல்லை என்கின்றனர். எங்களுடன் இருக்கும் மக்களை தற்குறி என்கின்றனர். இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, உங்கள் வாழ்நாள் முழுதும் விடை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, தி.மு.க.,வின் அரசியலை ஒரு கேள்விக் குறியாக்கப் போகின்றனர். த.வெ.க.,வினர் தற்குறியெல்லாம் கிடையாது; தமிழகத்தின் ஆச்சரியக்குறி. இவர்கள் எல்லாம் தமிழக அரசியலில் மாற்றத்திற்கான அறிகுறி. இவ்வாறு விஜய் பேசினார்.

