கரூர் நெரிசல் சம்பவ வழக்குகளை இன்று விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்
கரூர் நெரிசல் சம்பவ வழக்குகளை இன்று விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்
ADDED : அக் 27, 2025 12:02 AM

சென்னை: கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பான எட்டு வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா முன், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், செப்., 27ம் தேதி த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்தனர்.
விதிமுறைகள் இந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணிகள், தலைவர்கள் நடத்தும், 'ரோடு ேஷா' போன்றவற்றை ஒழுங்குபடுத்தி, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என, துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருகுமரன் மற்றும் பொன் காந்திமதிநாதன் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு உத்தரவிடக்கோரி, விழுப்புரத்தை சேர்ந்த ராஜன் என்பவர், மனு தாக்கல் செய்துள்ளார்.
கலெக்டர், எஸ்.பி., - டி.எஸ்.பி., - இன்ஸ்பெக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, த.வெ.க., தொண்டர் கார்த்தீபன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிறப்பு அமர்வு கரூர் சம்பவத்தை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அவர் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு உள்ளது.
கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு அமர்வு நியமனம் செய்ய, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ஞானேஸ்வரன் என்பவரும் மனுதாக்கல் செய்துள்ளார்.
சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை மாநகராட்சி பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நெரிசல் பலி தொடர்பான வழக்கில், முன் ஜாமின் கோரி, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் மனுதாக்கல் செய்து உள்ளார்.
இந்த எட்டு வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், இன்று விசாரணைக்கு வர உள்ளன.
இந்த வழக்குகளில், பரபரப்பான உத்தரவுகள் பிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

