அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் அன்னதானம் வழங்குவது ஏன்? கோர்ட் கேள்வி
அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் அன்னதானம் வழங்குவது ஏன்? கோர்ட் கேள்வி
UPDATED : ஜூலை 04, 2025 08:00 AM
ADDED : ஜூலை 04, 2025 06:35 AM

மதுரை: அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் சிறப்பு அன்னதானம் வழங்க தடை கோரிய வழக்கில், 'கடவுள் மறுப்பாளரான அவரது பெயரில் அன்னதானம் வழங்குவது ஏன் என மனுதாரர் தரப்பு கேள்வி எழுப்புகிறது. ஒருவர் பெயரில் அன்னதானம் வழங்க எத்தகைய விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து அறநிலையத்துறை தெளிவுபடுத்த வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியது.
அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி, கோயில்களில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். தான் ஹிந்து அல்ல என்பதை அடையாளப்படுத்திக் கொண்டவர். கோயில்கள், சிலை வழிபாடுகள் குறித்து விமர்சித்துள்ளார்.
அவர் எழுதிய 'ஆரியமாயை' புத்தகத்தில்,' நாலு தலைச் சாமிகள், ஆயிரம் கண்சாமி, காளை ஏறும் கடவுள், காக்காய் மீது பறக்கும் கடவுள் என புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் ஹிந்து என கூறிக்கொண்டால், இவர்களை நமது தெய்வங்கள் என ஒப்புக்கொண்டு தொழ வேண்டுமே. இச்செய்தியைக் கேட்டால் உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிட கேவலமானவர்கள் என கேலி செய்வார்களே! இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் துாக்கிப் போட்டுக் கொள்ள நமக்கு மனம் எப்படித் துணியும்.. ஆகவே நாம் ஹிந்து அல்லவென்று கூறுகிறோம்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
'தீ பரவட்டும்' புத்தகத்தில்,'கம்பராமாயணம், பெரியபுராணம் ஒழிக்கப்பட வேண்டும். இவை கற்பனைக் கதைகள். ஆரிய மார்க்கத்தைப் புகுத்தும் கருவிகள். ஆரியர்களை மேன்மைப்படுத்த, தமிழரை இழிவுபடுத்த, அடிமைப்படுத்த அவை பயன்படுகின்றன. தமிழரின் வாழ்வு, நெறி, அரசு, மானமும் கெடுவதால், அவைகளை ஒழிப்போம். தீயிலிடுவோம்,' என அண்ணாதுரை எழுதியுள்ளார்.
அண்ணாதுரை நினைவுநாளில் ஹிந்து கோயில்களில், கோயில் நிதியிலிருந்து சிறப்பு அன்னதானம் மற்றும் இலவச வேட்டி , சேலை வழங்குவதை நிறுத்தக்கோரி அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கோகுல் ஆஜரானார்.
நீதிபதிகள்:
கடவுள் மறுப்பாளர் அண்ணாதுரை பெயரில் எப்படி கோயில்களில் அன்னதானம் வழங்கலாம் என மனுதாரர் தரப்பு கேள்வி எழுப்புகிறது.
அடுத்ததாக ஈ.வெ.ரா.,நினைவு நாளில் கோயில்களில் அன்னதானம் வழங்கப்படுமா, அல்லது யாரோ ஒரு தலைவர் அல்லது வெளிநாட்டு தலைவர் பெயரில் அன்னதானம் வழங்குவீர்களா, இதற்கு கோயில் நிதியை பயன்படுத்துவீர்களா, இதற்குரிய விதிமுறைகள் என்ன.
அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் சுப்புராஜ்:
கோயில்களின் உபரி நிதியிலிருந்து சுதந்திரதினம், அண்ணாதுரை நினைவு தினத்தில் ஏழைகளுக்கு 1989 லிருந்து கோயில்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்', 'ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம்,' என அண்ணாதுரை கூறியுள்ளார்.
நீதிபதிகள்:
ஒருவரது பெயரில் கோயில்களில் அன்னதானம் வழங்க எத்தகைய விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து அறநிலையத்துறை கமிஷனரிடம் விபரம் பெற்று அதன் வழக்கறிஞர் 2 வாரங்களில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.