மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் முன்னுரிமை அளிக்க ஐகோர்ட் உத்தரவு
மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் முன்னுரிமை அளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : டிச 12, 2025 05:07 AM

சென்னை: திருப்பத்துார் மாவட்டம், வீரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சி.சோமசுந்தரம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
நான், 'குருமன்ஸ்' இனத்தை சேர்ந்தவன். எனக்கு, 40 சதவீத பார்வை குறைபாடு உள்ளது.
எனக்கு பழங்குடியின சான்றிதழ் கேட்டு, திருப்பத்துார் ஆர்.டி.ஓ.,விடம் கொடுத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. திருப்பத்துார் கலெக்டரிடம் மேல்முறையீடு செய்தேன். அந்த மனு நிலுவையில் உள்ளது.
தற்போது பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என் மனு மீது முடிவெடுக்கும் வரை, பழங்குடியின பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பணியிடத்தை ஒதுக்கி வைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை, தலை மை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் 40 சதவீத பார்வை மாற்றுத்திறனாளி. அவர் அனைத்து விதங்களிலும் சரிசமமாக மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
அரசியலமைப்பு பிரிவு 41ல் மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுபோல், மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள், குறைகள், மேல்முறையீடு போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும்.
மனுதாரர் கொடுத்த விண்ணப்பத்தை, திருப்பத்துார் கலெக்டர் ஒரு மாதத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் கொடுக்கும் விண்ணப்பங்கள், மேல் முறையீடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து வைக்குமாறு, அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

