ADDED : ஜூலை 23, 2025 12:09 AM
சென்னை:'நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நான்கு வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும்' என, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சீமான் தாக்கல் செய்த மனு:
என் பாஸ்போர்ட் காணாமல் போனதால் புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன்.
நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை சுட்டிக்காட்டி, கடந்த ஜனவரி, 31ல் என் விண்ணப்பத்தை அவர் நிராகரித்துவிட்டார். எனவே, அவரது உத்தரவை ரத்து செய்து, பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வா று கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வி.ராமமூர்த்தி, சங்கர் ஆஜராகி, 'மனுதாரருக்கு எதிராக, அரசியல் காரணங்களுக்காக மாநிலம் முழுதும், 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த நிலுவை வழக்குகளை காரணம் காட்டி, பாஸ்போர்ட் வழங்க முடியாது என, கூற முடியாது' என்றனர்.
இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதி, சீமானின் விண்ணப்பத்தை பரிசீலித்து, நான்கு வாரங்களில், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தர விட்டார்.

