மருதமலையில் 184 அடி முருகன் சிலை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி
மருதமலையில் 184 அடி முருகன் சிலை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி
ADDED : நவ 08, 2025 01:21 AM

சென்னை: கோவை மாவட்டம், மருதமலையில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடம், அடிப்படை வசதிகள் போன்ற முழு விபரங்களுடன், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை வனப்பகுதியில் உள்ள யானைகள் வழித்தடமான மருதமலை, சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான பகுதி. நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல யானைகள், இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.
இந்த பகுதியில், 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து, சென்னை கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதில், 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம், 184 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கு, கடந்த மாதம் 9ல் தடையில்லா சான்று பெற விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதியில் சிலை அமைவதால், யானை வழித்தடங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது' என கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் கூறியதாவது:
சிலை அமைவதற்கு, இந்த நீதிமன்றம் தடையாக இருக்காது. அதேநேரம், வனப்பகுதியில் இவ்வளவு உயரத்தில் சிலை அமைக்கப்படும்போது, அதை பார்வையிட எவ்வளவு பேர் வருவர்; குறைந்தபட்சம் 1,000 கார்களாவது வரும்; அவற்றை எங்கு நிறுத்துவீர்கள்?
அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் செய்ய, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது; அவர்கள் விட்டு செல்லும் குப்பை எவ்வாறு அகற்றப்படும்?
இவர்கள் விட்டு செல்லும் திடக்கழிவுகளால், நாளடைவில் வனமே மறைந்து விடாதா? இந்த திட்டத்தால், வனப்பகுதிக்கு, எவ்வித தொந்தரவும் ஏற்படக் கூடாது.
இங்கு 184 அடி உயர சிலை அமைத்தால், அதை சுற்றிய பகுதிகள் நகரமயமாகாதா; பல்வேறு காரணங்களால் வனப்பகுதிகள் சுருங்கி வருகின்றன. இதன் காரணமாக, மனித- - விலங்குகள் மோதல் நிகழ்வுகளும் நடக்கின்றன. போதிய வசதிகள் செய்யப்படவில்லை எனில், நெரிசல் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ''நீதிமன்றம் கோரிய விபரங்களுடன் விரிவான அறிக்கையை, அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்கிறோம்,'' என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், 'கூட்ட நெரிசல் மேலாண்மை நிர்வகிக்கும் முறை, சிலை அமைய உள்ள சரியான இடம், பார்க்கிங் போன்ற அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்த முழு விபரங்களுடன், அறநிலையத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின், சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பாக, அத்துறை நிபுணர்கள் ஆய்வு செய்வது குறித்து, இந்த நீதிமன்றம் முடிவு செய்யும்' என உத்தரவிட்டு, விசாரணையை டிச., 5க்கு தள்ளிவைத்தனர். அதுவரை, பணிகளை துவக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

