ராஜபாளையம் கோவிலுக்குள் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை
ராஜபாளையம் கோவிலுக்குள் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை
UPDATED : நவ 11, 2025 01:23 PM
ADDED : நவ 11, 2025 09:36 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற இரவு காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு காவலர்கள் இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்ததாக தெரிகிறது. அவர்களை கோவில் காவலர்கள் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது, காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. வெட்டி படுகொலை செய்யப்பட்ட காவலர்கள் பேச்சிமுத்து,50, சங்கரபாண்டியன் ,65, என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவிலில் உண்டியல் சேதமாகி இருப்பதால் மர்மநபர்கள் கொலை செய்து விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கோவிலில் பழமை வாய்ந்த சிலைகள், நகைகள் ஏதும் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து மதுரை சரக டி.ஐ. ஜி., அபினவ் குமார், எஸ். பி., கண்ணன் தலைமையில் போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடர்கிறது.
இது தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி, பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.

