உதிரி பாகங்கள், ஆட்கள் பற்றாக்குறை அடிக்கடி விபத்தில் சிக்கும் அரசு பஸ்கள்; தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு
உதிரி பாகங்கள், ஆட்கள் பற்றாக்குறை அடிக்கடி விபத்தில் சிக்கும் அரசு பஸ்கள்; தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு
ADDED : டிச 27, 2025 02:30 AM

சென்னை: 'அரசு போக்குவரத்துக் கழகங்களில், உதிரி பொருட்கள் மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால், பஸ்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன' என, தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், தினமும் 20,000 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 6,000க்கும் அதிகமான பஸ்கள் மிகவும் பழமையாக உள்ளன.
குறிப்பாக, மாவட்டங்கள் இடையே செல்லும் பஸ்கள், டவுன் பஸ்கள், அடிக்கடி பழுதாகின்றன. பழைய பஸ்களில், அடிச்சட்டம், உதிரி பாகங்கள் இருக்கைகள், ஜன்னல்கள், மேற்கூரை போன்றவை, தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும்.
ஆனால், போதிய அளவில் உதிரி பொருட்கள் இல்லை. காலிப் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதன் விளைவாக, அரசு பஸ்கள் அதிகம் விபத்துக்குள்ளாகின்றன என, புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலர் கமலக்கண்ணன்: அரசு போக்கு வரத்துக் கழகங்களில், 6,000க்கும் அதிகமான பஸ்கள், 15 ஆண்டுகளை கடந்தும் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களை நீக்கும் வரை, பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளை, தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், அரசு போக்குவரத்துக் கழகங்களில், டயர், கியர்பாக்ஸ் என பல்வேறு உதிரி பொருட்கள், பற்றாக்குறை உள்ளன. அதுபோல், பணிமனைகளில் ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது.
மேலும், ஒப்பந்த ஊழியர்களுக்கு, போதிய அளவில் பயிற்சி அளிக்காமல் பஸ்களை இயக்கி வருகின்றனர். இதனால், அரசு பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் ஆறுமுகநயினார்: அரசு போக்குவரத்து கழகங்களில், ஒரு கி.மீ.,க்கு எட்டு ரூபாய் என கணக்கீடு செய்து, முன்பெல்லாம் உதிரி பொருட்கள் வாங்கப்பட்டன. தற்போது, ஒரு ரூபாயாக குறைத்துள்ளனர்.
இதனால், புதிதாக உதிரி பாகங்கள் வாங்காமல், ஏற்கனவே உள்ளவற்றை சீரமைத்து, மீண்டும் பஸ்களை இயக்குகின்றனர். இதுவும், பஸ் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கிறது.
மேலும், அரசு போக்குவரத்து கழகங்களில், 35,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, நிரந்தர பணியாளர்கள் நியமிக்க, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

