தங்கம் சவரன் ரூ.1,04,800க்கு விற்பனை வெள்ளி கிலோ ரூ.31,000 என அதிகரிப்பு
தங்கம் சவரன் ரூ.1,04,800க்கு விற்பனை வெள்ளி கிலோ ரூ.31,000 என அதிகரிப்பு
ADDED : டிச 28, 2025 02:04 AM

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 1,680 ரூபாய் அதிகரித்து, 1,04,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை எப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் கிலோ 31,000 ரூபாய் உயர்ந்தது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 12,890 ரூபாய்க்கும், சவரன் 1,03,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 254 ரூபாய்க்கு விற்பனையானது.
கட்டுப்பாடுகள் நேற்று காலை, தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து, 13,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து, 1,04,000 ரூபாய்க்கு விற்பனை யானது.
வெள்ளி கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 274 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 13,100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 1,04,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து, 285 ரூபாய்க்கு விற்பனையானது. எப்போதும் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு 31,000 ரூபாய் உயர்ந்து, 2.85 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,680 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
சீனா அதிகளவில் வெள்ளிக்கட்டிகளை ஏற்றுமதி செய்கிறது. தற்போது, அரசிடம் அனுமதி பெற்று தான் வெள்ளிக்கட்டிகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என, சீன அரசு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
இது, உலகளவில் வெள்ளிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். இதன் காரணமாக, மற்ற நாடுகளில் தொழிற்சாலைகளுக்கான வெள்ளி தேவையான அளவில் கிடைக்காது.
உச்சம் இது, உலகளவில் தொழில் துறையில் பின்னடைவை ஏற்படுத்தும். இது போன்ற காரணங்களால், வெள்ளி மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதால், அதன் விலையும் உயர்ந்து வருகிறது.
இதேபோல், தங்கம் மீதான முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உச்சத்தை எட்டி வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

