ADDED : டிச 16, 2024 12:32 AM

சென்னை: ''பா.ம.க.,விடம் ஆறு மாதம் அரசு அதிகாரம் இருந்தால் போதும்; எவ்வளவோ நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு நிறைவேற்றி தருவோம்'' என, அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுதிய, 'போர்கள் ஓய்வதில்லை' நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. வி.ஐ.டி., பல்கலை வேந்தர் ஜி.விஸ்வநாதன் வெளியிட்டார்.
அதை, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் அன்புமணி பேசியதாவது:
பா.ம.க., விடம் ஆறு மாதம் அரசு அதிகாரம் இருந்தால் போதும், எவ்வளவோ நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு நிறைவேற்றி தருவோம். தமிழகத்தில் ஆறுகள் எங்கே இருக்கின்றன; எந்தெந்த ஆறுகளை இணைக்க வேண்டும்; எங்கே ஏரி உள்ளது; எங்கே குட்டை உள்ளது என, நாங்கள் பி.எச்.டி., முடித்துள்ளோம்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இலங்கை தமிழர்களுக்காகவும், உலகத் தமிழர்களுக்காகவும், எத்தனையோ பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். தேசிய அளவில் பல்வேறு சமுதாயங்களுக்காக குரல் கொடுத்து, பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்த தலைவர். ஆனால், அவரை ஜாதி வட்டத்திற்குள் சுருக்க பார்க்கின்றனர்.
பா.ம.க., வளரக்கூடாது என்பதற்காக, அரசியல் ஆதாயத்திற்காக, ராமதாசை அவமானப்படுத்தி, கொச்சைப்படுத்துகின்றனர். தலித் எழில்மலையை மத்திய அமைச்சராக்கி, அவர் சைரன் வைத்த காரில் செல்வதை பார்த்து, ராமதாஸ் மனமகிழ்ச்சி அடைந்தார்.
பல சமூக முன்னேற்றத்திற்காக போராடிய பா.ம.க., வை, வன்னியர் கட்சி என்றும், ராமதாசை ஜாதி தலைவர் என்றும் சுருக்க பார்க்கின்றனர். எத்தனையோ போராட்டங்கள் நடத்திய ராமதாசுக்கு, எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ''நான் கடவுளிடம் இரண்டு வரங்கள் கேட்கிறேன். ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம், ஒரு சொட்டு நீர் கடலுக்கு போகாத தமிழகம் வேண்டும் என்பதே, அந்த வரங்கள்,'' என்றார்.

