தமிழகத்தில் 7.41 ஏக்கரில் சந்தன மரங்கள்; விற்பனையில் ஆர்வம் காட்டாத வனத்துறை
தமிழகத்தில் 7.41 ஏக்கரில் சந்தன மரங்கள்; விற்பனையில் ஆர்வம் காட்டாத வனத்துறை
ADDED : நவ 06, 2025 05:09 AM

சென்னை: தமிழகத்தில், 7.41 ஏக்கர் பரப்பளவுக்கு சந்தன மரங்கள் இருந்தாலும், சந்தனக்கட்டை விற்பனையில், வனத்துறை போதிய ஆர்வம் காட்டுவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் மொத்த நிலப்பரப்பில், 39.59 சதவீதம் அதாவது, 9,179 சதுர கி.மீ., பரப்பளவு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. புதிதாக மரங்கள் வளர்ப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் வழியே, காப்புக் காடுகளின் பரப்பளவை உயர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன. பொதுவான மரங்களுடன், செம்மரங்கள், தேக்கு, சந்தனம், ரப்பர் மரங்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன.
சந்தன மரங்கள் என்றால், கர்நாடகா மற்றும் கேரளாவை கைகாட்டும் நிலை உள்ளது. தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 7.41 ஏக்கர் பரப்பளவுக்கு சந்தன மரங்கள் உள்ளன. ஆனால், இதை வணிக நோக்கில் பயன்படுத்துவதில், வனத்துறை போதிய ஆர்வம் காட்டவில்லை.
இது குறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் திருப்பத்துார், சேலம், சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் சந்தன மர கிடங்குகள் உள்ளன. இங்கு சேமிக்கப்படும் சந்தன மரங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. இது மட்டுமல்லாது, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒன்பது கோவில்களுக்கு, ஆண்டுக்கு, 200 கிலோ சந்தன மரங்கள் வழங்கப்படுகின்றன.
ஒடிஷாவின் புரி ஜெகந்நாதர் கோவில், உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் போன்றவற்றுக்கு, ஆண்டுக்கு, 312 கிலோ சந்தன மரங்கள் விற்கப்படுகின்றன.
இது போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் சந்தன மரங்கள் வழங்கப்படுகின்றன. கேரளா, கர்நாடக மாநிலங்களில், வனத்துறை சார்பில் சில்லறை விற்பனை முறையில், சந்தன மர துண்டுகள், பொடிகள் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்கள் விற்பதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

