ADDED : டிச 10, 2024 11:54 PM
சென்னை:சிறுநீரக நோயாளிகளுக்கான, 'டயாலிசிஸ்' சேவைகளை மேம்படுத்த, சிறப்பு நிபுணர் குழுவை அரசு அமைத்துள்ளது.
சமீப காலமாக, டயாலிசிஸ் சிகிச்சைகளுக்கான தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. தேசிய நலவாழ்வு குழும சேவைகளின் கீழ் மட்டும், தமிழகத்தில், 139 டயாலிசிஸ் மையங்கள் செயல்படுகின்றன.
அரசு சார்பில் கட்டணமின்றி இந்த சிகிச்சை வழங்கப்பட்டாலும், அனைத்து இடங்களுக்கும் முழுமையாக சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. அதைக் கருத்தில் வைத்து, டயாலிசிஸ் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் தலைமையில், துறை சார் வல்லுனர்கள், மருத்துவ பணிகள் மற்றும் ஊரக நலத்திட்டம், மாநில உறுப்பு மாற்று ஆணையம், தன்னார்வ நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் என, 19 பேர் இடம் பெற்று உள்ளனர்.
இதுகுறித்து, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குனர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'தனியார் மற்றும் அரசு டயாலிசிஸ் மையங்களை மதிப்பீடு செய்து, இரண்டுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்தல், டயாலிசிஸ் சேவைகளை மேம்படுத்துதல், தனியார் பங்களிப்புடன் அதை விரிவுபடுத்துதற்கான சாத்தியக்கூறுகளை நிபுணர் குழு ஆராய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

