ஈ.வெ.ரா., தான் வேண்டும் என்றால் நா.த.க.,விலிருந்து வெளியேறலாம்: சீமான்
ஈ.வெ.ரா., தான் வேண்டும் என்றால் நா.த.க.,விலிருந்து வெளியேறலாம்: சீமான்
UPDATED : பிப் 11, 2025 06:24 AM
ADDED : பிப் 11, 2025 04:21 AM

திருச்சி: ''ஈ.வெ.ரா.,வை யார் ஏற்றாலும், நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஈ.வெ.ரா., தான் வேண்டும் என்றால், நா.த.க.,வில் இருந்து வெளியேறலாம்,'' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நேற்று திருச்சியில் அளித்த பேட்டி:
ஈரோடு இடைத்தேர்தலில் நா.த.க.,வுக்கு, பா.ஜ.,வின் ஓட்டுகள் கிடைத்தன என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் வாங்கிய அனைத்து ஓட்டுகளும், எங்கள் கட்சிக்காக மக்கள் அளித்த ஓட்டுகள். ஒரு ரூபாய் செலவு செய்யாமல் பெற்ற ஓட்டுகள் அவை.
விரைவில் தெரியும்
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பலரும் டிபாசிட் இழந்த வரலாறு உண்டு. நுாறு ஓட்டுகளுக்குள்ளான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தலைவர்களும் உள்ளனர். பிரபாகரன் உள்ளிட்ட உலகத்தில் யார் ஏற்றுக் கொண்டாலும், ஈ.வெ.ரா.,வை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பிரபாகரனே வந்து சொன்னாலும், இந்த விஷயத்தில் பின்வாங்கப் போவதில்லை.
எவ்வளவோ பெரியார்கள் இருக்கும்போது, நான் ஏன் ஈ.வெ.ரா.,வை ஏற்க வேண்டும்? ஈ.வெ.ரா., குறித்து கொஞ்சம் ஓவராக பேசி விட்டதாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இப்போது தான் துவங்கி உள்ளேன்; இன்னும் போகப் போக நிறைய உள்ளது. இந்த விஷயத்தில் என் வேகம் என்ன என்பது விரைவில் தெரியும்.
இந்த தேர்தல் மூலம், கட்சி கட்டமைப்பை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம். புலி தனியாகத் தான் வேட்டையாடும். நான் தனியாகத் தான் நிற்கிறேன். கோழைகள் கூட்டத்துடன் ஏன் நிற்கணும்? தனித்து நிற்க வீரமும், துணிவும் வேண்டும்.
நான் பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளர் என்பது யூகத்தில் சொல்வது. என் கோட்பாடு, இந்திய கட்சிகளுக்கு, திராவிட கட்சிகளுக்கு எதிரானது. உலகில் ஊழல் இல்லாத நாடாக டென்மார்க் உள்ளது. அப்படியொரு நாட்டைத் தான் கட்டமைக்க விரும்புகிறேன்.
'தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி; முட்டாள்களின் மொழி; அந்த சனியனை விட்டு ஒழி' என்று சொன்ன, அந்த சனியனை எதிர்ப்பது தான் என் இலக்கு.
எதையும் செய்யவில்லை
ஒரு மொழியை இழிவாக பேசிவிட்டு, அந்த மொழி சார்ந்துள்ள இனத்துக்கு எப்படி ஒருவன் தலைவனாக இருக்க முடியும். தமிழகத்தின் அனைத்து எம்.பி.,க்களும் தமிழகத்துக்காக எதுவும் உருப்படியாக பேசவில்லை; செய்யவில்லை.
இவ்வாறு சீமான் பேசினார்.

