அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு
UPDATED : ஆக 16, 2025 07:01 PM
ADDED : ஆக 16, 2025 08:27 AM

சென்னை: சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சுமார் 11 மணி நேரம் சோதனை நடத்தினர்.
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்து வருகிறார். இவரது வீடு திண்டுக்கல் அசோக் நகரில் உள்ளது. இவரது வீட்டில் காலை 6:45 மணி முதல் 4 அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் 8 சிஆர்பிஎப் போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவரது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த காரும் சோதனைக்கு உள்ளானது.
அதேபோல் வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ . பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டிலும் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு 10 சிஆர்பிஎப் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு மாலைக்கு மேலும் சோதனை நீடிப்பதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
ஐ.பெரியசாமியின் மகனும், பழநி எம்.எல்.ஏ.வும், திண்டுக்கல் தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள செந்தில்குமார் வீடு, திண்டுக்கல் அருகே சீலப்பாடியில் உள்ளது. இவரின் வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு 8 சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மூன்று பேரின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் உள்ளே புகுந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதலே சோதனையில் ஈடுபட்டதால், திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்ட வரும் தகவல் அறிந்து தி.மு.க., கட்சி தொண்டர்கள் அவரின் வீட்டு முன்பு குவிந்தனர். அதேபோல் சென்னை, மதுரை, திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வத்தலக்குண்டு அருகே உள்ள அமைச்சர் பெரியசாமிக்கு சொந்தமான இருளப்பா மில்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற ஸ்பின்னிங் மில்லில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 7:00 மணி முதல் சோதனையிட்டனர்.
திண்டுக்கல் மற்றும் சென்னையில் சுமார் 11 மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள் கிளம்பி சென்றனர்.
இதனிடையே, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை எதிரொலியாக தலைமைச் செயலகத்தில் ஐ.பெரியசாமி அறைக்கு பூட்டு போடப்பட்டு உள்ளதுடன், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.