ஓய்வு நாளில் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' கூடாது: முன்கூட்டியே விசாரணையை முடிக்க உத்தரவு
ஓய்வு நாளில் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' கூடாது: முன்கூட்டியே விசாரணையை முடிக்க உத்தரவு
ADDED : அக் 24, 2025 01:33 AM

சென்னை: 'அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதை தவிர்க்க, அரசு ஊழியர்கள் செய்த முறைகேடுகள் குறித்து முன்கூட்டியே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனிதவள மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, அனைத்து துறை அரசு செயலர்கள், து றை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு, மனிதவள மேலாண்மை துறை செயலர் சமயமூர்த்தி அனுப்பியுள்ள கடிதம்:
'பல்வேறு அரசு துறைகளில், 25 முதல் 30 ஆண்டுகள் வரை பணியாற்றிய அரசு ஊழியர்கள், அமைதியாக ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும்.
'ஓய்வு பெறும் நாளில், அவர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும ் ' என, 2021 செப்டம்பரில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதை பின்பற்ற, அரசு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, அரசு ஊழியர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தால், அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன், சம்பந்தப்பட்ட அதிகாரி, ஒழுங்கு நடவடிக்கைகளை விரைவாக முடிக்க வேண்டும். அந்த ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன், இறுதி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இதன் வாயிலாக குற்றம்சாட்டப்பட்டோர், பெரிய தண்டனை விதிக்கப்படுவதில் இருந்து தப்ப முடியாது. ஒழுங்கு நடவடிக்கைகளை செயல்படுத்த, மனிதவள மேலாண்மை துறை ஏற்கனவே வழங்கியுள்ள காலக்கெடுவை பின்பற்ற வேண்டும்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநகரத்தின் விசாரணையை முடித்து, கண்காணிப்பு ஆணையம் வாயிலாக, ஓராண்டுக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும். தீர்ப்பாயத்தின் விசாரணையை முடித்து, அதன் முடிவுகளை ஓராண்டுக்குள், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்ப வேண்டும்.
தீர்ப்பாயத்தின் அறிக்கை பெற்றதும், துறை தலைவர்களால் நான்கு மாதங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். குடிமைப்பணி விதிகளின் கீழ், 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்க வேண்டும்.
தவறு செய்த அதிகாரி, தன் எழுத்துப்பூர்வ விளக்கத்தை, 30 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும். விளக்கம் பெற்ற ஏழு நாட்களில், விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர், 30 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
விசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்த பின், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி, அதன் மீது 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்.
துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளின் இறுதி உத்தரவுகளை ஏழு நாட்களில் வழங்க வேண்டும்.
பணி ஓய்வு பெறுவதற்கு முன் , ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மீது, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளில், நியமன அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி, இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

