துாத்துக்குடி - திருச்செந்துார் தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த வழக்கு
துாத்துக்குடி - திருச்செந்துார் தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த வழக்கு
ADDED : பிப் 17, 2025 11:02 PM
மதுரை: துாத்துக்குடி - திருச்செந்துார் தேசிய நெடுஞ்சாலையை பக்தர்கள் நலன் கருதி மேம்படுத்த கோரி தாக்கலான வழக்கில் நெடுஞ்சாலை துறை செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி காந்திமதிநாதன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: துாத்துக்குடி முதல் திருச்செந்துார் வரை 40 கிலோ மீட்டர் ரோடு, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரோட்டில் துாத்துக்குடி துறைமுகம், ஸ்பிக் நிறுவனம், உப்பளங்கள் உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ரோடு மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் இருந்ததுபோது 2019--2020 நிதியாண்டில் புனரமைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிற்கு சென்ற பின் இந்த ரோட்டில் எவ்வித பராமரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை.
ஏராளமான பக்தர்கள் இந்த ரோடு வழியாக தினமும் திருச்செந்துார் வருகின்றனர். தற்போது இந்த ரோடு பல இடங்களில் குண்டும், குழியுமாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதை பராமரிக்க கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் நலன் கருதி துாத்துக்குடி முதல் திருச்செந்துார் வரை உள்ள 40 கிலோ மீட்டர் துாரம் உள்ள ரோட்டை சீரமைக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இம்மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. 'தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

