விஐபி.,களுடன் வலம் வந்த போதைக் கடத்தல் திமுக புள்ளி: பாரபட்சமின்றி நடவடிக்கை பாயுமா?
விஐபி.,களுடன் வலம் வந்த போதைக் கடத்தல் திமுக புள்ளி: பாரபட்சமின்றி நடவடிக்கை பாயுமா?
ADDED : பிப் 28, 2024 12:08 PM

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் திமுக முன்னாள் நிர்வாகியான திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர், அரசியல்வாதிகள், திரைப்பட நட்சத்திரங்களுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகின்றன. ஆளும்கட்சியினருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அவர் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க., நிர்வாகியுமான ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான், சென்னையில் விடுதி, ஓட்டல் நடத்தி வருகிறார். சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலோடு தொடர்பு கொண்டு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு, 'மெத்தாம்பெட்டமைன்' போதை பொருளின் மூலப் பொருளான, 'சூடோபெட்ரின்' என்ற வேதிப் பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகர்கள் விஜய்சேதுபதி, அமீர், சூரி, இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் ஜாபர் உடன் இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் ஜாபரின் காபி கடை திறப்பு குறித்து பேசுகின்றனர். அதுமட்டுமல்லாமல், திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, எம்.பி., அப்துல்லா ஆகியோருடனும் ஜாபர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இப்படி திரைத்துறையிலும், அரசியலிலும் நெருக்கமாக உள்ள ஜாபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவித்ததாவது: திமுக.,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர், இந்தியா முழுவதும் நெட்வொர்க் அமைத்து போதைப்பொருட்களை வெளிநாட்டிற்கும் அனுப்பியது உள்ளிட்ட எந்த விஷயங்களும் கட்சிக்கு தெரியாமலா இருக்கும்?
அவரை தேடிக் கொண்டிருப்பதாக கூறும் போலீசார் உண்ணையிலேயே தேடுகிறார்களா என்ற சந்தேகமும் வருகிறது. அவர் மீது இதுவரை எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை. திமுக.,வில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஜாபர், போதைப்பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாக மாறியுள்ளார்.
அப்படிப்பட்ட நபருக்கு தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக ஆதரவாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. போதைப் பொருட்களால் சமூகம் சீரழிந்து வரும் நிலையில், இதுபோன்ற நபர்களை கட்டுபடுத்தாமல் விட்டால் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தவே முடியாது. எனவே ஜாபர் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

