UPDATED : மார் 17, 2024 02:25 AM
ADDED : மார் 15, 2024 11:46 PM

கன்னியாகுமரி :''ஜெயலலிதாவை அவமானப்படுத்திய தி.மு.க., இன்னும் மாறவே இல்லை; இன்றும் அக்கட்சி பெண்களுக்கு எதிரியாகவே உள்ளது,'' என, பிரதமர் மோடி பேசினார்.
கன்னியாகுமரியில் நேற்று நடந்த பாரதிய ஜனதா கட்சியின் பிரமாண்டமான தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள்:
என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்!
நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இன்று எழுந்துள்ள அலை வெகுதுாரம் எட்டப்போகிறது. நாட்டை உடைக்க வேண்டும் என்று கனவு கண்டவர்களை ஜம்மு - காஷ்மீர் மக்கள் நிராகரித்துள்ளனர். தமிழக மக்களும் அதையே செய்யப்போகின்றனர்.
அழித்து விடும்
பெரிய மாற்றத்திற்கான அறிகுறிகளை நான் காண்கிறேன். இம்முறை தமிழகத்தில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் பெருமையை, பா.ஜ.,வின் செயல்பாடு அழித்து விடும்.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியால், தமிழகத்தை ஒருபோதும் வளர்ச்சியடையச் செய்ய முடியாது. மக்களை கொள்ளையடிப்பதற்காக ஆட்சிக்கு வருவதே இவர்களின் அரசியல் அடிப்படை. ஒரு புறம் பா.ஜ.,வின் நலதிட்டங்கள், மறுபுறம் அவர்களின் கோடிக்கணக்கான ஊழல்கள்.
'2ஜி' ஊழல்
நாங்கள் நாட்டுக்கு ஆப்டிகல் பைபர், 5ஜி கொடுத்தோம். அவர்கள் என்ன கொடுத்தனர்? பல லட்சம் கோடிகளை 2ஜி ஊழல் வாயிலாக எடுத்தனர். அந்த கொள்ளையில் பெரும் பங்கு வகித்தது தி.மு.க., தான் என்பதை நாடறியும்..
தி.மு.க., தமிழகத்தின் நிகழ்கால எதிர்கால எதிரி மட்டுமல்ல; தமிழகத்தின் கடந்த காலத்துக்கும், அதன் பாரம்பரியத்துக்குமே தி.மு.க., தான் எதிரி.
அயோத்தியில் நடந்த கும்பாபிஷேக விழாவை தமிழக மக்கள் பார்க்கவிடாமல், தி.மு.க., தடை விதிக்க முயன்றது. இதற்காக அவர்களை கோர்ட் கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாரத கலாசாரத்தின் மீது, அவர்களுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்று பாருங்கள். இவர்கள் தமிழகத்தின் அடையாளத்தை களங்கப்படுத்துகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட போதும், தி.மு.க.,வும் காங்கிரசும் மவுனம் காத்தன. இவர்கள் தமிழ் கலாசாரத்தை அழிக்க நினைக்கின்றனர்.
ஜல்லிக்கட்டு முழு உற்சாகத்துடன் கொண்டாட வழி வகுத்தது எங்கள் அரசு. ஜல்லிக்கட்டாக இருந்தாலும் சரி, தமிழகத்தின் அடையாளமாக இருந்தாலும் சரி, மோடி இருக்கும் வரை அதை யாராலும் தொட முடியாது; இது மோடியின் உத்தரவாதம்.
நம் மீனவர்கள் ஏன் இலங்கை சிறைக்கு செல்ல வேண்டும்? யாருடைய பாவங்களுக்காக நம் மீனவ சகோதர சகோதரிகள் தண்டிக்கப்படுகின்றனர்? இந்த கேள்விகளுக்கான பதில் விரைவில் தெரிய வரும். அப்போது, தி.மு.க., காங்கிரசின் நிலை அம்பலமாகும். மிக விரைவில் முழு உண்மை தமிழக மக்கள் முன் வரும்.
குற்றம் அதிகரிப்பு
என் அரசு, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக முழு சக்தியுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், தி.மு.க., காங்கிரசுக்கு பெண்களை ஏமாற்றவும், அவமானப்படுத்தவும் மட்டுமே தெரியும்.
அன்றைக்கு தி.மு.க., தலைவர்கள் ஜெயலலிதாவை எப்படி அவமானப்படுத்தினர் என்பது, தமிழக மக்களுக்கு தெரியும். இன்றைக்கும் அவர்கள் மாறவே இல்லை. அதே கலாசாரம் தி.மு.க.,வில் இன்னும் தொடர்கிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.
அவர்கள் பெண்களின் பெயரால் அரசியல் செய்கின்றனர். பெண்கள் மீது அக்கறை இருப்பதாக காட்டி ஏமாற்றுகின்றனர். நாங்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்த போது, அதை ஆதரிப்பதற்கு பதிலாக, தி.மு.க., தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.
தி.மு.க.,வும், காங்கிரசும் பெண்களுக்கு எதிரானவர்கள். இது தான் அவர்களின் உண்மையான முகம். இதை தமிழக மக்கள் இப்போது புரிந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்களின் மிகுந்த அன்பை உணர்கிறேன். தமிழ் கற்கவில்லையே என்று வருத்தப்படுகிறேன்.
@Image@
மோடி பேச்சை இனி தமிழில் கேட்கலாம்
-
தேர்தல் பிரசாரத்திற்கு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பா.ஜ., எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. அரசியல் கட்சிகளிலேயே முதன்முதலில் இணையதளத்தை துவங்கியது பா.ஜ., தான்.
கடந்த, 2002 குஜராத் சட்டசபை தேர்தலிலேயே, தொலைபேசி மற்றும் மொபைல் போனில் குரல் பதிவு வாயிலாக, மோடி பிரசாரம் செய்தார். தொழில்நுட்பம் வளர வளர, 'பேஸ்புக், யு-டியூப், எக்ஸ் தளம், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களை, தேர்தல் பிரசாரத்திற்கு பா.ஜ., பயன்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடி ஹிந்தியில் பேசுவதை, ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நேரலையாக கேட்கும் வசதியை, பா.ஜ., ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவில்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது. 'நமோ செயலி' இனி தமிழிலும் செயல்படும். ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக இனி என் அனைத்து உரைகளையும் தமிழில் கேட்கலாம்' என்றார்.இதற்காக நமோ செயலியில் வசதி செய்யப்பட்டுள்ளது. அது
தவிர பேஸ்புக், டிவிட்டர், யு-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் 'நரேந்திர மோடி தமிழ்' என, தனி பக்கங்கள் துவங்கப்பட்டுள்ளன.

