'பூத் ஏஜன்ட்' நியமனத்தில் முதலிடத்தில் தி.மு.க.,
'பூத் ஏஜன்ட்' நியமனத்தில் முதலிடத்தில் தி.மு.க.,
UPDATED : டிச 22, 2025 07:31 AM
ADDED : டிச 22, 2025 03:58 AM

சென்னை: அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள் விபரத்தை, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி அதிக முகவர்களை நியமித்து, தி.மு.க., முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில், ஒரு மாதத்திற்கு முன், 68,470 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போது, 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதால், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.
அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும், முகவர்கள் நியமிக்கும்படி, அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுச்சாவடி முகவர்கள் நியமிக்கப்படும் நிலையில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், முகவர்கள் இருப்பதாக, அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.
ஆனால், பெரும்பாலான கட்சிகள், முகவர்களை நியமிக்காதது, தெரிய வந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், எத்தனை ஓட்டுச் சாவடிகளுக்கு, முகவர்களை நியமித்துள்ளனர் என்ற விபரத்தை, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தி.மு.க., 65,210 ஓட்டுச் சாவடிகளுக்கு முகவர்களை நியமித்து, முதலிடத்தில் உள்ளது. அ.தி.மு.க., 63,707; தமிழக பா.ஜ., 54,258; தே.மு.தி.க., 31,849; தமிழக காங்கிரஸ் 27,158 என ஓட்டுச்சாவடி முகவர்களை நியமித்துள்ளன.
இதுபோல, நாம் தமிழர் கட்சி 1,749; விடுதலை சிறுத்தைகள் கட்சி 146; பகுஜன் சமாஜ் கட்சி 86; ஆம் ஆத்மி 52 ஓட்டுச்சாவடிகளுக்கு முகவர்களை நியமித்துள்ளன.

