வேலில் உதயசூரியன் சின்னம் பதித்த திமுக வேட்பாளர்: மருதமலை கோயிலில் தரிசித்து பிரசாரம் துவக்கம்
வேலில் உதயசூரியன் சின்னம் பதித்த திமுக வேட்பாளர்: மருதமலை கோயிலில் தரிசித்து பிரசாரம் துவக்கம்
ADDED : மார் 27, 2024 11:40 AM

வடவள்ளி: கோவை தொகுதி திமுக வேட்பாளர் ராஜ்குமார், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்து பிரசாரத்தை துவக்கினார். அவருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உதயசூரியன் சின்னம் பதித்த 'வேல்' வழங்கி பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
கோவை லோக்சபா தொகுதியில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால், நட்சத்திர தொகுதியாக கருதப்படுகிறது. இத்தொகுதியில், தி.மு.க., சார்பில், ராஜ்குமார் என்பவர் போட்டியிடுகிறார். இன்று, தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுடன் சென்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தனது வேட்புமனுவை வைத்து சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின், மருதமலையில் உள்ள பழங்குடியின மக்களிடம் ராஜ்குமார் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அமைச்சர் ராஜா, வேட்பாளர் ராஜ்குமாருக்கு, உதயசூரியன் சின்னம் பதித்த 'வேல்' வழங்கி பிரசாரத்தை துவக்கி வைத்தார். அப்போது, 'வெற்றி வேல் வீர வேல்' எனக்கூறி, வேலை வழங்கினார். அதன்பின், மருதமலை அடிவாரத்தில் உள்ள கடைகளில், ராஜ்குமார், ஓட்டு கேட்டார். அதன்பின், வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டு சென்றனர்.

