ADDED : அக் 27, 2024 02:34 AM

காஞ்சிபுரம்,:அ.தி.மு.க.,வின் 53ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரம் காந்தி ரோட்டில்நடந்தது. இதில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்று பேசினார்.
பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:
தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பம் தான் அதிகாரத்துக்கு வர முடியும். இந்தியாவில் மன்னராட்சி எப்போதோ முடிந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் மன்னராட்சி தான் நடக்கிறது. தி.மு.க.,வை பொறுத்தவரை ஒரு கார்ப்பரேட் கம்பெனி; குடும்ப உறுப்பினர்கள் தான் இயக்குனர்கள். ஸ்டாலின் மனைவி, சபரீசன், உதயநிதி, ஸ்டாலின் என, தமிழகத்துக்கு நான்கு முதல்வர்கள். 4 அதிகார மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
முதல்வர் ஸ்டாலினுக்கு முழுக்க முழுக்க தன் குடும்பம் பற்றி தான் சிந்தனை. தனக்கு பின் மகன் வர வேண்டும். உதயநிதி இன்று அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் என்ன சாதனை செய்தார்.
உதயநிதி மட்டுமல்ல இன்பநிதி வந்தாலும் ஏற்பபோம் என அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார். அவர் அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார்.
அ.தி.மு.க.,வை உடைக்க, முடக்க பலரும் அவதாரம் எடுத்தார்கள். அத்தனையும் முயற்சிகளையும் அ.தி.மு.க., உடைத்தது. என் மீது, 4,800 கோடி டெண்டர் ஊழல் வழக்கு, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்தார். அந்த வழக்கில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. இதனால், அவர் வழக்கை வாபஸ் பெற முயன்றார். நான் வாபஸ் பெறவில்லை. நீதிமன்ற விசாரணைக்கு பின், நான் எந்த குற்றமும் செய்யவில்லை என தீர்ப்பு வந்தது.
தி.மு.க., அமைச்சர் ஒருவர் 471 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். அ.தி.மு.க.,வுக்கு செய்த துரோகம் காரணமாக அவர் அனுபவிக்கிறார். டாஸ்மாக், பார் போன்றவற்றில் ஊழல் செய்தார்கள். மது பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கின்றனர். இதன்மூலம், ஆண்டுக்கு 3,600 கோடி எங்கே செல்கிறது.
தி.மு.க., எப்போதும் விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும். ஊழலுக்காகவே கலைக்கப்பட்டது தி.மு.க., ஆட்சி தான்.
மகளிர் உரிமை தொகை திட்டம் நாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியில், 50 ரூபாயாக இருந்த பொன்னி அரிசி விலை 70 ஆக உயர்ந்துவிட்டது.
41 மாத தி.மு.க.,வின் மோசமான ஆட்சி பற்றி அனைவரிடமும் எடுத்து கூறுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

