'பின்டெக் சிட்டி'யில் 'டிஸ்ட்ரிக்ட் கூலிங் சிஸ்டம்'
'பின்டெக் சிட்டி'யில் 'டிஸ்ட்ரிக்ட் கூலிங் சிஸ்டம்'
ADDED : பிப் 08, 2024 01:17 AM
சென்னை:தமிழகத்தில் முதல்முறையாக, சென்னை நிதி தொழில்நுட்ப நகரத்தில் கட்டப்படும் கட்டடங்களுக்கு, 'டிஸ்ட்ரிக்ட் கூலிங் சிஸ்டம்' எனப்படும் ஒரே இடத்தில் இருந்து, அனைத்து அலுவலக கட்டடங்களுக்கும், பகுதிவாரியாக குளிர்சாதன வசதியை ஏற்படுத்த, 'டிட்கோ' திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் டிட்கோ எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம், சென்னை நந்தம்பாக்கத்தில், நிதி தொழில்நுட்ப நகரத்தை அமைத்து வருகிறது. மொத்தம், 110 ஏக்கரில் முதல் கட்டமாக, 56 ஏக்கர் நிலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கு உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி, உள்நாடு மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் நிலங்கள் வழங்கப்பட உள்ளன.
தற்போது, 36 ஏக்கர் உடைய 13 தொழில்மனைகள், குத்தகைக்கு விடப்பட்டு உள்ளன. அங்கு, 70 லட்சம் சதுர அடிக்கு கட்டடங்கள் கட்ட வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதி நகரத்தில் அமைய உள்ள நிறுவனங்களுக்கு, 'டிஸ்ட்ரிக்ட் கூலிங் சிஸ்டம்' எனப்படும் ஒரே இடத்தில் இருந்து, ஒட்டுமொத்த கட்டடத்துக்கும் பகுதிவாரியாக குளிர்சாதன வசதியை ஏற்படுத்த, டிட்கோ திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டிஸ்ட்ரிக்ட் கூலிங் சிஸ்டம் என்பது, 'சென்ட்ரலைஸ்டு ஏசி' கட்டமைப்பை போன்றது.
'சென்ட்ரலைஸ்டு ஏசி' வசதி இருந்தாலும், தங்கள் அலுவலகத்தின் தேவைக்கு ஏற்ப தொழில் நிறுவனங்கள் கூடுதலாக, 'ஏசி' சாதனங்களை பொருத்துவது வழக்கம். இதனால், அதிக மின்சாரம் செலவாகும். நிறுவனங்களுக்கு பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.
அதிக 'ஏசி' சாதனங்களால், 'கார்பன் டை ஆக்சைடு' வெளியேறுவதும் அதிகரிக்கும். புதிதாக அமைக்கப்படும் நகரங்களில், டிஸ்டிரிக்ட் கூலிங் சிஸ்டம் ஏற்படுத்துமாறு, உலக நாடுகளை, ஐ.நா., வலியுறுத்தியுள்ளது.
குஜராத்தில் உள்ள, 'கிப்ட் சிட்டியில்' இந்த கூலிங் சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், ஒரே இடத்தில் குளிர்ச்சியான நீரை உள்ளடக்கிய கட்டமைப்பில் இருந்து, அந்நகரத்தில் கட்டப்படும் அனைத்து அலுவலகங்களுக்கும் குளிர்சாதன வசதி வழங்கப்படும்.
இதற்கு குறைந்த மின்சாரமே செலவாகும்; சுற்றுச்சூழலை பாதிக்காது. நிறுவனங்களுக்கும் பராமரிப்பு செலவு குறையும்.
நந்தம்பாக்கம் நிதிதொழில்நுட்ப நகரத்திலும் டிஸ்ட்ரிக்ட் கூலிங் சிஸ்டம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு எவ்வளவு செலவாகும், என்னென்ன தொழில்நுட்பம் தேவை என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

