பல்லுயிர் பாரம்பரிய தலமாக திண்டுக்கல் வீர கோவில் வனப்பகுதி அறிவிப்பு
பல்லுயிர் பாரம்பரிய தலமாக திண்டுக்கல் வீர கோவில் வனப்பகுதி அறிவிப்பு
ADDED : மார் 27, 2025 11:35 PM
சென்னை:திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி வீர கோவில் வனப்பகுதியை, பல்லுயிர் பாரம்பரிய தலமாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், பல்லுயிர் சிறப்புமிக்க கோவில் காடுகளை, பல்லுயிர் பாரம்பரிய தலமாக, தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை, தமிழக அரசு, 2022ல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்தது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா ரெட்டியபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, காசம்பட்டி வீர கோவில் பகுதி, கோவில் காடாக உள்ளது. இக்காடு, 12.28 ஏக்கரில் அமைந்து உள்ளது.
இப்பகுதியைச் சுற்றி காணப்படும், பசுமையான மாந்தோப்புகள், இயற்கை அழகுடன் காட்சி அளிக்கின்றன. வன விலங்குகளை பாதுகாத்தல் உள்ளிட்ட விஷயங்களில், சமநிலையை பாதுகாக்க, இப்பகுதி உதவிகரமாக அமைந்துள்ளது.
இது, பல்லுயிர்களை பாதுகாப்பதோடு, உள்ளூர் காலநிலையை பாதுகாக்கவும் உதவுகிறது. இங்கு உள்ளூர் தெய்வமான, 'வீரணன்' குடிகொண்டு உள்ளதால், உள்ளூர் மக்களால், இப்பகுதி போற்றி பாதுகாக்கப்படுகிறது.
இங்கு, 48 வகை தாவர இனங்கள், 22 புதர்கள், 21 கொடிவகை தாவரங்கள், 29 மூலிகைகள், 12க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காணப்படுகின்றன. இப்பகுதி, தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பல்லுயிர் தாயகமாக உள்ளது.
இதைக் கருத்தில் வைத்து, இப்பகுதியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக, தமிழக அரசு அறிவித்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்துஉள்ளது.
மதுரை அரிட்டாபட்டிக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தலமாக காசப்பட்டி வீர கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், காசம்பட்டி வீர கோவில் காடுகள் குறித்த குறும்படத்தை, வனத்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

