'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியருக்கு விருது! பூஜ்ய ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த சுவாமிகள் வழங்கினார்
'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியருக்கு விருது! பூஜ்ய ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த சுவாமிகள் வழங்கினார்
ADDED : செப் 07, 2025 07:16 AM

கோவை : சட்டீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் உள்ள ஸ்ரீ சக்ரா மகா மேரு பீடம், பூஜ்ய ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த சுவாமிகள், கோவை ராம் நகர் கோதண்ட ராமர் கோவிலில் இரண்டு மாதம் தங்கி, விரதமிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். விரதம் முடிவில், பல்வேறு துறைகளில், தர்மத்தை கடை பிடித்து வருவோருக்கு, பீடம் சார்பில், 'பிராசஸ்திபத்ரம்' என்ற 'தர்ம ரத்னா விருது' வழங்கும் விழா, கோவில் அரங்கில் நேற்று நடத்தப்பட்டது.
கோவில் தலைவரான, மூத்த வக்கீல் நாகசுப்பிரமணியம் வரவேற்றார். 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதி சார்பில், அவரது பேரன் ஆர்.ராம்குமார், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி சார்பில், வங்கியின் செயல் இயக்குனர் விஜய்ஆனந்த், ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் சிவகணேஷ் ஆகியோருக்கு 'தர்ம ரத்னா' விருது, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணனுக்கு, 'தர்ம ரக்சா சிரோன்மணி' விருது வழங்கப்பட்டது.
பூஜ்ய ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த சுவாமிகள் விருது வழங்கி பேசுகையில், ''சனாதன தர்மத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். தர்மத்தை கடைபிடித்தால் கடவுள் அருள் கிடைக்கும். மதமாற்றம் என்ற புற்றுநோய் பரவுகிறது. மதமாற்றம் தடுக்க எப்போது அழைத்தாலும் வரத்தயாராக இருக்கிறேன். மதம் மாறிய ஹிந்துக்கள் திரும்பி வர வேண்டும். ஹிந்துக்கள் தினமும் நெற்றியில் திருநீர், குங்குமம் வைக்க வேண்டும். தர்ம காரியத்தில் சிறந்து விளங்கியோருக்கு விருது வழங்கப்பட்டது. 'தினமலர்' நாளிதழ் ஆன்மிக செய்திகளை தொடர்ந்து வெளியிட வேண்டும்,'' என்றார்.