நெல் கொள்முதலில் 50 ஆண்டு அனுபவம் இருந்தும் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் தடுமாற்றம்
நெல் கொள்முதலில் 50 ஆண்டு அனுபவம் இருந்தும் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் தடுமாற்றம்
ADDED : அக் 24, 2025 12:45 AM

சென்னை: 'விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் பணியில், 50 ஆண்டுகள் அனுபவம் இருந்தும், இந்த சீசனில் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்து, பாதுகாப்பாக மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பாமல், நுகர் பொருள் வாணிப கழகம் தாமதம் செய்வதால் தான், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்' என, மத்திய உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில், 2001 முதல் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. ஆனால், 1975ம் ஆண்டில் இருந்தே, தமிழ்நாடு வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்தது.
நடப்பு சீசனில், விவசாயிகளிடம் இருந்து நெல் வாங்க, மத்திய அரசு, 100 கிலோ எடை உடைய, குவின்டால் சன்ன ரக நெல்லுக்கு, 2,389 ரூபாய்; பொது ரக நெல்லுக்கு, 2,369 ரூபாயை குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்குகிறது.
தமிழக அரசு, அதனுடன் சன்ன ரக நெல்லுக்கு 156 ரூபாய், பொது ரக நெல்லுக்கு 131 ரூபாய் ஊக்கத்தொகை சேர்த்து வழங்குகிறது.
விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் நெல், வாணிப கழகத்திற்கு சொந்தமான, 21 அரிசி ஆலைகள் மற்றும் அதன் முகவர்களாக உள்ள, 623 தனியார் ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷனில் வழங்கப்படுகிறது.
விலை அதிகம் இந்த ஆலைகளில், மாதாந்திர அரவை திறன், 11.43 லட்சம் டன். வெளிமார்க்கெட்டை விட, அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகமாக உள்ளதால், கடந்த நான்கு ஆண்டுகளாக, நெல் கொள்முதல் அதிகரித்து வருகிறது.
நடப்பு சீசனிலும் நெல் அதிகம் வரும் என்பது வாணிப கழகத்துக்கு தெரியும். எனவே, அதிகமாக வரும் நெல்லை, உடனுக்குடன் ராமநாதபுரம், விருதுநகர் போன்ற வறண்ட மாவட்டங்களுக்கு அனுப்பி, பாதுகாப்பாக வைப்பதற்கான முன் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்; அதை செய்யவில்லை.
அரிசியில் மாவுச்சத்து மட்டுமே உள்ளது. எனவே, ஏழை மக்களுக்கு, குறிப் பாக கர்ப்பிணியருக்கு ரத்த சோகை பிரச்னையை தடுக்க, இரும்புச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைக்க செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி என்பது, 1 கிலோ அரிசி மாவாக அரைக்கப்படும்.
அதில், இரும்பு சத்து, 'போலிக் அமிலம், வைட்டமின் பி 12' போன்ற சத்துக்கள் கலந்த கலவை சேர்க்கப்படும். அந்த கலவையை அரிசி வடிவில் மாற்றி, 100 கிலோ அரிசிக்கு, 1 கிலோ கலந்து செறிவூட்டப்பட்ட அரிசியாக தயாரிக்கப்படும்.
இரு ஆண்டுகளாக இந்த அரிசி வழங்கப்படும் நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி தரத்தை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு சில விதிகளை சமீபத்தில் வகுத்தது.
அதாவது, செறிவூட்டப்பட்ட அரிசி கலவையை, டில்லியில் உள்ள உணவு துறைக்கு அனுப்பினால், தரத்தை பரிசோதித்த பின் அனுமதி அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. தர பரிசோதனைக்கு, அந்த கலவையை அனுப்புவதில் தமிழகம் தான் தாமதம் செய்தது.
இந்த அனுமதி கிடைக்காததால் தான், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய முடியவில்லை என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறுவது ஏற்புடையதல்ல.
வாய்ப்பே இல்லை ஒரு வேளை அனுமதி கிடைத்திருந்தால், 10 நாட்களில் இதுவரை கொள்முதல் செய்துள்ள 9 லட்சம் டன் நெல்லையும் அரிசியாக மாற்றி இருப்பரா? அதற்கு வாய்ப்பே இல்லை.
போதிய அனுபவம் இருந்தும், இந்த முறை விரைவாக நெல் கொள்முதல் செய்து பாதுகாப்பாக வைக்கவும், ஆலைகளுக்கு அனுப்பவும், உரிய ஏற்பாடுகளை வாணிப கழகம் செய்யாததால், விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இதற்கு, வாணிப கழகமே பொறுப்பு; மத்திய அரசின் மீது குறை கூறக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

