மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய வலியுறுத்தல்
மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய வலியுறுத்தல்
ADDED : ஏப் 18, 2025 11:30 PM
சென்னை:'உள்ளாட்சி அமைப்புகளில், நியமன முறையில் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினராக்கப்படுவர் என்ற அறிவிப்புக்கு பதில், மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை உள்ளாட்சி நிர்வாகத்தில் செயல்படுத்த வேண்டும்' என, அனைத்து வகை மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தின், மாநில தலைவர் கருப்பையா வலியுறுத்தி உள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளை, நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்ட மசோதாவை, முதல்வர் ஸ்டாலின் கடந்த 16ம் தேதி, சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து, அனைத்து வகை மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கை:
மானிய கோரிக்கையில் எங்கள் பிரதான கோரிக்கையான, பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளிவராதது, வேதனையாக உள்ளது. உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமை அளிக்கும் வகையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இருப்பினும் போட்டியின்றி, நேரடி முறையில் நியமனம் என்பது, சற்று வேதனையாக உள்ளது. இது, மற்றவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை காட்டுவது போல உள்ளது.
அவ்வாறு இல்லாமல் தலைவர், சேர்மன், மேயர் என அனைத்து பதவிகளிலும், மாற்றுத்திறனாளிகள், ஆளும் கட்சியினரின் ஆதரவின்றி சுயேச்சையாக போட்டியிட, மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை உள்ளாட்சி நிர்வாகத்திலும் அரசு செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

