சிறுதானியங்கள் கொள்முதல் தமிழகத்திற்கு டில்லி அறிவுரை
சிறுதானியங்கள் கொள்முதல் தமிழகத்திற்கு டில்லி அறிவுரை
ADDED : மார் 03, 2024 01:50 AM
சென்னை : மத்திய அரசு, ராணுவ வீரர்களுக்கான உணவு பட்டியலில் சிறுதானியங்களை சேர்த்துள்ளது. அதற்காக, விவசாயிகளிடம் இருந்து கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை கொள்முதல் செய்து தருமாறு, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் இலவசமாக கேழ்வரகு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக, நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது.
இதற்காகவும், மத்திய அரசின் திட்டங்களுக்காகவும், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்கிறது. 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, தமிழகத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
இதற்காக, 100 கிலோ எடை உடைய குவிண்டா லுக்கு, 3,846 ரூபாய் வழங்கப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில், கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கிய கேழ்வரகு கொள்முதல் சீசன், இம்மாதம் முடிவடைய இருந்தது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஆகஸ்ட் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதுவரை, 300 டன் கேழ்வரகு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுதானிய கொள்முதல் தொடர்பாக மத்திய உணவுத்துறை செயலர், அனைத்து மாநில செயலர்களுடன் சமீபத்தில் ஆய்வு நடத்தினார்.
சிறுதானியங்கள் கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்துமாறு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அவர் அறிவுறுத்திஉள்ளார்.

