3 மணி நேரத்தில் உருவாகிறது புயல்; வட தமிழகம் நோக்கி நகரும் என கணிப்பு
3 மணி நேரத்தில் உருவாகிறது புயல்; வட தமிழகம் நோக்கி நகரும் என கணிப்பு
UPDATED : நவ 27, 2025 11:32 AM
ADDED : நவ 27, 2025 09:38 AM

சென்னை: தென் மேற்கு வங்கக்கடலில் 3 மணி நேரத்தில் புயல் உருவாகிறது; இந்த புயல் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடல் - இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 730 கிலோமீட்டர் தொலைவில் இந்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா நோக்கி நகரும். ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்ற பெயர் புயலுக்கு சூட்டப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று சில இடங்களில் பலத்த தரைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்யலாம். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில், நாளை மறுநாள் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை கூண்டு
தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

