நிலத்தடி நீரை உறிஞ்சும் யூகலிப்டஸ் மரங்களை அகற்ற ஐகோர்ட் அனுமதி
நிலத்தடி நீரை உறிஞ்சும் யூகலிப்டஸ் மரங்களை அகற்ற ஐகோர்ட் அனுமதி
ADDED : மார் 10, 2024 02:03 AM
மதுரை:செங்கல்பட்டு ரமேஷ்குமார், பெங்களூரு திராஜ்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், வடகவுஞ்சியில் எங்கள் பட்டா நிலத்தில் யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன. இவற்றை அகற்றி, வெளியில் கொண்டு செல்ல அனுமதி கோரி, கலெக்டரிடம் மனு அளித்தோம். அவர் நிராகரித்தார். அதை ரத்து செய்து அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
அரசு தரப்பில், 'மனுதாரர்களின் நிலம் தரிசு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வனத்துறைக்கு சொந்தமான குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நிலத்தை சூழ்ந்துள்ளது. வனப்பகுதி நிலத்திற்குள் மனுதாரர்கள் பயன்படுத்த வழித்தட உரிமை இல்லை.
'அந்த சர்வே எண்ணில் ஓடைகள் உள்ளன. பாதை உரிமையை வழங்குவது விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். இயற்கையான நீரோடையை பாதிக்கும். சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்குள் வருவதால் பாதை வசதி வழங்க சாத்தியக்கூறு இல்லை' என, தெரிவித்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அகற்றப்பட வேண்டியது யூகலிப்டஸ் மரங்கள். இது நிலத்தடி நீர்மட்டத்தை குறைக்கிறது. அம்மரங்களை அகற்றவும், இனிமேல் நடக்கூடாது எனவும் இந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாகனங்களில் வெளியில் கொண்டு செல்வதற்கான மர வகைகளுக்குரிய போக்குவரத்து விதிகளில் இருந்து யூகலிப்டஸ் நீக்கப்பட்டுள்ளது. பட்டா நிலத்தில் இருந்து அம்மரங்களை எடுத்துச் செல்ல 2018ல் அனுமதிக்கப்பட்டது என மனுதாரர்கள் தரப்பு கூறுகிறது.
நீரோடையை கடப்பதற்கு உள்ள ஒரு பாதை வரை, மனிதர்களால் மரங்கள் எடுத்துச் செல்லப்படும் என, மனுதாரர்கள் தரப்பு உறுதியளித்துள்ளது. ஓடையை கடந்ததும், 10 அடி அகலப் பாதை உள்ளது.
இந்த பாதை, வாகனங்களால் மரங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. அனுமதி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் யூகலிப்டஸ் மரங்களை வெட்டி அகற்ற மனுதாரர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
மனுதாரர்களின் நிலத்தில் இருந்து மரங்களை வனப்பகுதி ஓடை வழியாக மனிதர்களால் கைச்சுமையாக எடுத்துச் செல்ல வேண்டும். ஓடைக்கு அப்பால் உள்ள 10 அடி சாலை வழியாக வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

