3 ஆண்டாக ஒரே இடத்தில் பணிபுரிவோரை இடமாற்ற கூட்டுறவு துறை உத்தரவு
3 ஆண்டாக ஒரே இடத்தில் பணிபுரிவோரை இடமாற்ற கூட்டுறவு துறை உத்தரவு
ADDED : டிச 22, 2025 12:42 AM

சென்னை: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவோரை, இடமாற்றம் செய்ய கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில், விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை கடன் உட்பட பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. பல சங்கங்களில், செயலர், உதவி செயலர், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர்.
இதனால் சிலர், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, கூட்டுறவு சங்கங்களில் ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் செயலர்கள் மற்றும் உதவி செயலர்களை இடமாற்றம் செய்ய, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை, பல மண்டல இணை பதிவாளர்கள் பின்பற்றவில்லை. இதையடுத்து, 'இடமாற்றம் செய்து நிறைவு அறிக்கையை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும், இதுவரை அறிக்கை அனுப்பாதது ஏற்புடையதாக இல்லை.
'இது தொடர்பான நிறைவு அறிக்கையை, வரும் 29ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் நேற்று முன்தினம் உத்தரவிட்டு உள்ளார்.

