நோயாளிக்கு சிகிச்சை அளித்த துாய்மை பணியாளரால் சர்ச்சை
நோயாளிக்கு சிகிச்சை அளித்த துாய்மை பணியாளரால் சர்ச்சை
UPDATED : டிச 17, 2025 05:44 AM
ADDED : டிச 17, 2025 04:23 AM

துாத்துக்குடி: அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளர் ஒருவர், நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் பணிபுரியும் துாய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் சுப்புராஜ்.
இவர், அவசர சிகிச்சை பிரிவில் நோயாளி ஒருவருக்கு, சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே அவசர சிகிச்சை வார்டுக்குள் அனுமதி உண்டு.
ஆனால், டாக்டர்கள் யாரும் இல்லாத நிலையில் சுப்புராஜ், நோயாளிக்கு சிகிச்சை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

