நடிகர் கவுண்டமணிக்கு சொந்தமான இடத்தை ஒப்படைக்க கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு
நடிகர் கவுண்டமணிக்கு சொந்தமான இடத்தை ஒப்படைக்க கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு
ADDED : மார் 17, 2024 03:39 AM

சென்னை : வணிக வளாகம் கட்டுவதற்காக, நடிகர் கவுண்டமணி கொடுத்த ஐந்து கிரவுண்ட் நிலத்தை, அவரிடமே ஒப்படைக்கும்படி உத்தரவிட்டதை எதிர்த்து, தனியார் கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர் கவுண்டமணி, 1996ல் நளினிபாய் என்பவருக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள நிலத்தை வாங்கி, அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து, 22,700 சதுரடி பரப்பிலான வணிக வளாகத்தை, 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டும் என, ஒப்பந்தம் செய்துஉள்ளார்.
கட்டுமான பணிக்காக ஒப்பந்ததாரர் கட்டணமாக, 3.58 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு, 1996 முதல் 1999 வரை, 1.04 கோடி ரூபாய் செலுத்திய நிலையில், 2003ம் ஆண்டு வரை கட்டுமான பணிகளை தொடங்கவில்லை எனக்கூறி, கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கறிஞர் ஆணையரை நியமித்தார். சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர், 46.51 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, 'கட்டுமான பணிகளை முழுமையாக முடித்து விட்டு, பணம் தராவிட்டால் தான், அதைக் கேட்க முடியும். முடித்த பணிகளுடன் ஒப்பிடும் போது, 63 லட்சம் ரூபாய் அதிகமாகவே நடிகர் கவுண்டமணியிடம் கட்டுமானம் நிறுவனம் பெற்றுள்ளது.
'நடிகர் கவுண்டமணியிடம் இருந்து பெற்ற ஐந்து கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை, மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும். 2008 ஆகஸ்ட் முதல் மாதம் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2019ல் தனி நீதிபதி பிறப்பித்த இந்த தீர்ப்பை எதிர்த்து, தனியார் கட்டுமான நிறுவனமான ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் நிறுவனம், 2021ல் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துஇருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தும், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும்தீர்ப்பளித்துள்ளது.

