'காம்பேக்ட் சப் - ஸ்டேஷன்' திட்டம்: அதிக செலவால் கைவிட்டது மின் வாரியம்
'காம்பேக்ட் சப் - ஸ்டேஷன்' திட்டம்: அதிக செலவால் கைவிட்டது மின் வாரியம்
ADDED : ஆக 07, 2025 12:14 AM

சென்னை: வழக்கமான துணைமின் நிலையம் அமைக்க ஏற்படும் செலவை விட, 'காம்பேக்ட் சப் - ஸ்டேஷன்' எனப்படும், வினைதிறன் மிக்க துணை மின் நிலையம் அமைக்க, நான்கு மடங்கு கூடுதல் செலவாகும் என்பதால், அந்த திட்டத்தை மின் வாரியம் கைவிட்டுள்ளது.
மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், துணை மின் நிலையங்களுக்கு எடுத்து வரப்பட்டு, உயரழுத்தம் குறைக்கப்படுகிறது.
இறுதியாக, 33/ 11 கி.வோ., துணைமின் நிலையங்களில் இருந்து, மின் வழித்தடங்கள் வழியே அனுப்பப்பட்டு, மின் சாதனங்கள் உதவியுடன் வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு 33/ 11 கி.வோ., துணைமின் நிலையம் அமைக்க, 400 சதுர மீட்டர் இடம் தேவை. அதன் வெளிப்புறத்தில், 8 எம்.வி.ஏ., அல்லது, 16 எம்.வி.ஏ., எனப்படும், 'மெகா வோல்ட் ஆம்பியர்' திறனில், தலா இரண்டு பவர் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும். அருகில் உள்ள கான்கிரீட் கட்டுமானத்தில், கட்டுப்பாட்டு அறை இருக்கும்.
அதில் மின்சாரத்தை இயக்கும், 'பிரேக்கர், பேட்டரி' உள்ளிட்ட சாதனங்கள் இடம் பெறும். இதை அமைக்க ஒன்றரை ஆண்டுகளாகும்.
சென்னையில் புதிதாக துணைமின் நிலையங்கள் அமைக்க, நிலம் கிடைப்பதில்லை.
எனவே, சோதனை முறையில், 200 சதுர அடி இடத்திற்குள், 33/ 11 கி.வோ., திறனில், இரண்டு, 'காம்பேக்ட் பிரமைரி சப் - ஸ்டேஷன்' துணை மின் நிலையங்கள் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்தது.
'காம்பேக்ட்' துணை மின் நிலையம் என்பது, சிறிய கன்டெய்னர் போல் இருக்கும். அதற்குள், பிரேக்கர் உள்ளிட்ட கட்டுப்பாட்டு கருவிகள் இடம்பெறும்.
அவற்றை, வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருக்கும், 'பவர் டிரான்ஸ்பார்மர்' உடன் இணைத்து, மின்சாரத்தை வினியோகம் செய்யலாம்.
இதை நிறுவ, இரண்டு மாதங்கள் போதும். இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். அதை, பவர் டிரான்ஸ்பார்மரில் இணைத்து, மின் வினியோகம் செய்யலாம்.
இது குறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:பெருநகரங்களில் துணைமின் நிலையங்கள் அமைக்க இடம் கிடைக்காததால் 'காம்பேக்ட்' துணை மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், வழக்கமான துணைமின் நிலையம் அமைக்க, 3 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், காம்பேக்ட் துணை மின் நிலையத்திற்கு, 10 -முதல் 12 கோடி ரூபாய் வரை செலவாகும். ஏற்கனவே, மின் வாரியம் நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே, 'காம்பேக்ட்' துணைமின் நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகளிடம் இடம் கேட்கப்பட்டு, அங்கு துணைமின் நிலையம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.